சிதம்பரம் நடராஜர் பெருமானை அவதூறாக விமர்சித்த யூடியூப்பர் யூ2புரூட்டஸை கைது செய்யக்கோரி, தில்லையில் சிவனடியார்கள் போராட்டம் தொடங்கி இருக்கிறது.
தமிழகத்தில் திராவிட கழகத்தைச் சேர்ந்த கும்பல் ஹிந்துக்களையும், ஹிந்து தெய்வங்களையும் அவமதிக்கும் செயல் தொடர்ந்து வருகிறது. 2020-ம் ஆண்டு ஹிந்துக் கடவுளான முருகப் பெருமானையும், அவரது வேலையும், கந்தசஷ்டி கவசத்தையும் இழிவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டான் சுரேந்திரன் என்கிற யூடியூப்பர். இது தொடர்பாக ஹிந்து அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில், அ.தி.மு.க. அரசின் போலீஸார் சுரேந்திரனை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு, திராவிடக் கும்பல் சற்றே அடக்க வாசிக்கத் தொடங்கியது. ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் செயல்களும் குறையத் தொடங்கின.
ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றி விட்டது. இதன் பிறகு, ஹிந்து தெய்வங்களை நிந்திக்கும் செயல் மீண்டும் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், கடந்த மாதம் யூ2புரூட்டஸ் என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் மைனர் விஜய் என்பவன், சிதம்பரம் நடராஜர் பெருமான் நடனமாடுவது குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தான். இது ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மேற்படி யூடியூப்பர் மீது ஹிந்து அமைப்புகள் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தி.மு.க. அரசின் போலீஸாரோ, யூ2புரூட்டஸ் மைனர் விஜய்யை கைது செய்யவில்லை.
தி.மு.க. அரசின் இந்த ஹிந்து விரோத போக்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தி.மு.க. அரசை கண்டித்தும், யூடியூப்பர் யூ2புரூட்டஸ் மைனர் விஜய்யை கைது செய்யக் கோரியும் ஹிந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்தன. அப்படியும் தி.மு.க. அரசு மைனர் விஜய்யை கைது செய்யவில்லை. இதனால், அவன் சுதந்திரமாக நடமாடி வருகிறான். இந்த நிலையில்தான், தி.மு.க. அரசின் ஹிந்து விரோத போக்கை கண்டித்தும், மைனர் விஜய்யை கைது செய்யக் கோரியும் மே 23-ம் தேதி சிவனடியார்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, போராட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், போராட்ட நாளான இன்று காலையிலேயே சிதம்பரத்தில் குவியத் தொடங்கி விட்டனர் சிவனடியார்கள். திட்டமிட்டபடி, இன்று மாலை சிவனடியார்களின் போராட்டமும் தொடங்கி விட்டது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் தில்லையில் குவிந்து போராட்டம் நடத்தி வருவது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.