ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல நூல்களை எழுதி உள்ளார். நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் உள்ளிட்ட நாவல்களையும் இவர் எழுதியுள்ளார். இந்த நிலையில், ’நீர் வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எழுத்தாளரை பாராட்டி பதிவு வெளியிட்ட முதல்வர், அது தவறான தகவல் என்பதை அறிந்ததும், தன் பதிவை நீக்கினார். அந்த பதிவில், ‘நொய்யல் மனிதர்களின் வாழ்வியலை, தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்து நடையால், கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் தேவி பாரதியின் நாவல், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகி இருப்பதற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்’ என்று கூறியிருந்தார். அதன்பின், சாகித்ய அகாடமி விருது எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை என்ற உண்மை தெரியவந்த உடனே, முதல்வர் ஸ்டாலின் தன் பதிவை நீக்கியுள்ளார்.
ஒரு முதல்வருக்கே உண்மையான தகவல் கிடைக்கவில்லையா என்றும், தவறான கருத்துக்களை எவ்வாறு ஒரு முதல்வர் வெளியிடலாமா ? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.