சீனாவில் கடந்த 20 நாட்களில் மட்டும் 25 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவின் ஊபேய் மாகாணம் வூகானில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உருவானது. இது, அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மட்டுமல்லாத உலக நாடுகள் அனைத்தையும் புரட்டிப் போட்டது. இந்தியாவில் 2020 மார்ச் மாதம் 25-ம் தேதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, 2021 இறுதிவரை தொடர்ந்தது. இதேபோல உலக நாடுகள் பலவும் லாக்டவுன் அறிவித்து கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர முயன்றன. எனினும், கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அதேபோல, உலகம் முழுவதும் 62 கோடி பேர் உயரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், சீனாவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
முதல் மற்றும் இரண்டாவது அலையில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா, கொரோனா பாதிப்பை முற்றிலும் குறைக்கும் விதமாக ‘ஜீரோ கோவிட்’ கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து, ஜீரோ கட்டுப்பாட்டை நீக்கி, தளர்வுகளை அறிவித்தது சீனா அரசு. இதுதான் அந்நாட்டுக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கி இருக்கிறது. அதாவது, கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து ஒமைக்ரான் வைரஸானது. தற்போது அதன் துணை வகைகளான BA 5.2 மற்றும் BF.7 என புதிய வகை வைரஸாக மாறியிருக்கிறது.
இந்த வைரஸ்தான் தற்போது சீனாவில் பரவிவருகிறது. இதிலும், BF.7 வைரஸ் சீனாவின் பீஜிங்கில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அடுத்த 3 மாதங்களில் சீனாவில் கொரோனாவின் 3-வது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதேசமயம், தற்போதே சீனாவில் நிலைமை மோசமாக இருப்பதை சமூக வலைதளப் பதிவுகள் உறுதிசெய்கின்றன. குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட சீன மக்கள் சிகிச்சையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கி இருக்கிறது. இதை பதிவிட்டிருக்கும் சீனாவைச் சேர்ந்த தொற்றியியல் நிபுணர், “தளர்த்தப்பட்ட கொரோனா விதிமுறைகளால் சீனாவில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்கிறார்கள். இது வெறும் தொடக்கம் மட்டும்தான். இன்னும் 90 நாள்களில் 10% உலக மக்களுக்கு தொற்று பரவும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சீனாவில் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு, 140 கோடி மக்கள்தொகையில் வெறும் 7 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும், கடந்த வாரங்களில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை எனவும் சீன அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக கொரோனா மரணத்தால் உயிரிழந்தவர்களை எரியூட்ட முடியாமல் சீனா திணறுவதாக தகவல் வெளியாகிறது. கொரோனா பாதிப்பு குறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் நடத்திய 20 நிமிடக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசு ஆவணத்தை ரேடியோ ஃப்ரி ஆசியா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. அதில், டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை சீனாவில் கிட்டத்தட்ட 25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணம் சொல்கிறது. இது சீனாவின் மக்கள் தொகையில் 17.65 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டிசம்பர் 20-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் ரேடியோ ஃப்ரி ஆசியா மதிப்பிட்டிருக்கிறது.
அதேபோல, இங்கிலாந்தைச் சேர்ந்த ஏர்பினிட்டி என்கிற சுகாதார நிறுவனம் இன்னொரு தகவலை வெளியிட்டிருக்கிறது. அதில், சீனாவில் தினமும் 1 கோடி பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், 5,000-க்கும் மேல் உயிரிழப்புகள் இருந்திருக்கலாம் எனவும் கூறுகிறது. மேலும், 2023 ஜனவரியில் நாள்தோறும் 37 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், மார்ச் மாதம் நாள்தோறும் 42 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அந்நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது. பீஜிங் தகனக் கூடங்களில் நாளொன்றுக்கு 50 முதல் 100 வரையிலான உடல்கள் எரியூட்டப்படுவதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல்தான், பல பகுதிகளிலும் எரியூட்டப்பட வேண்டிய உடல்களால் தகனக் கூடங்கள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க இடமில்லாமல், ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளை படுக்க வைத்திருக்கிறார்கள். அதேபோல, தரையிலும் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், பரிசோதனை செய்யாமலேயே பணியில் ஈடுபடுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறதாம். இதே நிலை தொடர்ந்தால், 2023-ம் ஆண்டுக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான மரணம் ஏற்படும் என்று வாஷிங்டன் சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரேசில், ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் உருமாறிய கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவில் இருந்து வந்த குஜராத் பெண் உட்பட 2 பேருக்கும் மற்றும் ஒடிஸா மாநிலத்தில் 2 பேருக்கும் என 4 பேருக்கு புதிய வகை BF.7 ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இதையடுத்தே, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் மருத்துவ அதிகாரிகளின் கூட்டம் நடந்திருக்கிறது. இதில், விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகளை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், மக்கள் கூட்டமாகக் கூடும் இடங்களில் முக்கவசம் கட்டாயம் என்றும், நோய் பரவலைத் தடுக்க, மாநிலத்தில் கண்டறியப்படும் தொற்று புது வகை வைரஸ்தானா என்பதைக் கண்டறிய மரபணு பரிசோதனை உட்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், கொரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.
ஆகவே, மக்களே உஷார்!