ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு தடை?!

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு தடை?!

Share it if you like it

மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருவதால், பாரத் ஜோடோ யாத்திரையை தள்ளி வைக்கும்படி ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி இருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதும் பரவி, ஏராளமான மனித உயிர்களை காவு வாங்கியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்த சூழலில், சீனாவில் மீண்டும் கொரோனா அலை வீசி வருகிறது. மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல், ஒரே கட்டிலில் இருவர் படுத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா அலை, அதன் அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் மத்திய பா.ஜ.க. அரசு உஷார்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக, மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். புதிதாகத் தோன்றும் கொரோனா வைரஸ் திரிபுகளை கண்டறிய வேண்டும். கொரோனா தொற்று இருப்பவர்களின் மாதிரிகளை சேகரித்து மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு உட்படுத்துவதை முடுக்கிவிட வேண்டும். உலகளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸ் திரிபுகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்” என்று அறிவுறுத்தி இருக்கிறது. இந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார். ஆகவே, கொரோனாவை கருத்தில் கொண்டு யாத்திரையை தள்ளி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்திக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், “பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குகொள்ளும் அனைவரும் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டவர்கள் மட்டுமே யாத்திரையில் பங்கேற்க வேண்டும். யாத்திரையில் கலந்து கொள்ளும் முன்பும், கலந்து கொண்ட பின்பும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேச நலனை கருத்தில் கொண்டு பாதயாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது ராகுலின் யாத்திரை ராஜஸ்தான் மாநிலத்தை கடந்து ஹரியானா மாநிலத்திற்குள் நுழைந்திருக்கிறது. இந்த யாத்திரையின்போது ராகுல் காந்தி அணிந்திருந்த ஷூவின் லேஸ் அவிழ்ந்து விட்டது. இதைக்கண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ராகுலின் ஷூ லேஸை கட்டி விட்டார். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it