அசாம் மாநிலம் லக்கிம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: உங்கள் எம்.பி யார், எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும். அடுத்த பிரதமர் யார்? என்பதை நீங்கள் ஏப்ரல் 19ம் தேதி முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒரு பக்கம் ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணியும், மறுபக்கம் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க வும் உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை.
இந்தியாவின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசாம் மாநில வளர்ச்சிக்கு காங்கிரஸ் அரசு என்ன செய்துள்ளது?. 2004 முதல் 2014 வரை அசாமுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,62,000 கோடி மட்டுமே. அதேசமயம், 2014 முதல் தற்போது வரை ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 4,15,000 கோடி. இது தான் பிரதமர் மோடியின் 10 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனை ஆகும்.
வரும் ஆண்டுகளில் அசாம் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். சில நாட்களுக்கு முன்பு, அசாமின் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று ராகுல் கூறினார். அவரது பாட்டி அசாம் மாநிலம் வளர்ச்சி அடைய என்ன செய்தார்?. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.