ஹாங்காங்கில் செயல்பட்டுவந்த உலகப்புகழ் பெற்ற ‘ஜம்போ’ கப்பல் ஹோட்டல் கடலில் மூழ்கி விட்டதாக, அதன் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக அறியப்படும் ஹாங்காங்கில் ‘ஜம்போ’ எனப்படும் மிகப்பெரிய மிதக்கும் கப்பல் உணவகம் செயல்பட்டு வந்தது. இது ஹாங்காங்கின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் என உலக பிரபலங்கள் பலரும் உணவருந்திய ஹோட்டலாகத் திகழ்ந்தது. மேலும், ஹாலிவுட் திரைப்படங்கள் பலவற்றிலும் இந்த மிதக்கும் உணவகம் இடம்பெற்றிருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் வந்து செல்லும் இடமாக விளங்கி வந்தது இந்த ஜம்போ மிதக்கும் உணவகம்.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஜம்போ ஹோட்டல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. எனவே, கடந்த 2020-ம் ஆண்டு ஜம்போ மிதக்கும் கப்பல் உணவகம் மூடப்பட்டதோடு, அங்கு பணிபுரிந்த அனைத்து பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், உணவகத்தை பராமரிக்க எக்கச்சக்கமாக செலவாகியது. இதை சமாளிக்க முடியால் கப்பல் உணவக உரிமையாளர் திணறி வந்தார். எனவே, மிதக்கும் கப்பல் உணவகத்தை கைவிட அதன் உரிமையாளர் கருதி இருக்கிறார். இதையடுத்து, கப்பல் உணவகம் கடந்த 14-ம் தேதி ஹாங்காங்கில் இருந்து புறப்பட்டது.
தென் சீனக் கடலில் உள்ள ஷீஷா தீவுப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கப்பல் நீரில் மூழ்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கப்பல் உணவகத்திற்குள் கடல் நீர் நுழையத் தொடங்கியவுடனேயே, அதன் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேபோல, கப்பலை மீட்கவும் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது என்றும் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.