கொரோனா பாதிப்பு விவரங்களை சீனா அளிக்க வேண்டும் என அந்நாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி கேட்டு கொண்டுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து, உலக நாடுகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது. உலக நாடுகளுக்கு அந்நோயை பரப்பிய சீனா அதன்பிடியில் சிக்கி தவித்து வருவதாக பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் நிலவும் கொரோனா பாதிப்பு தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை இடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், தேசிய தொற்று கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், சீனாவில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தொற்று பாதித்த பகுதிகள், கண்காணிப்புப் பணிகள், மருத்துவ சிகிச்சைகள், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. மேலும், சீனா மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து சீன நிபுணர்கள் உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்தனர்.
இவற்றைக் கேட்டுக்கொண்ட உலக சுகாதார அமைப்பு, சீனாவில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தடுப்பூசி எத்தனை நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்ற முழு விவரங்கள் கேட்கப்பட்டன. அதிலும் குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் எவ்வளவு நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் அடங்கிய விவரங்களை சீன நிபுணர்களிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டு இருந்தன. எனினும், இந்த விவரங்களை அவர்கள் வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
கொரோனா விஷயத்தில், சீன நிபுணர்கள் மெத்தனம் காட்ட கூடாது. மற்ற நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும், ஜனவரி 3-ம் தேதி நடைபெற உள்ள தொற்று நோய்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டத்தில், நாங்கள் கேட்ட முழு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பெரும் தொற்றில் பலர் சீனாவில் மடிந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், உலக சுகாதார அமைப்பின் உத்தரவு சீ சின்பிங் அரசிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.