கடந்த 2012-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் சார்பில் போட்டியிட்ட கிறிஸ்தவ ஜனாதிபதி வேட்பாளரை தோற்கடித்தவர் இதே திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் பி.ஏ. சங்கமா. இவர், சோனியா காந்தியின் தலைமைக்கு எதிராக போர்கொடி உயர்த்தியவர். இதையடுத்து, அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். அதன்பின்னர், கடந்த 2012 – ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இவருக்கு, பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கரம் நீட்டி இருந்தன. அன்றைக்கு, ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சார்பில் களம் இறங்கியவர் பிரணாப் முகர்ஜி. இவருக்கு, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த திருமாவளவன் தனது ஆதரவினை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வெகுவிரைவில் முடிவடைய இருக்கிறது. அந்தவகையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் விதமாக ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனிடையே, ஆளும் பா.ஜ.க.வின் சார்பில் யார்? வேட்பாளர் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. ஆனால், திமு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க தலைவர் திருமாவளன் ஒரு கிறிஸ்தவரை தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு, பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வி.சி.க தலைவருக்கு தக்க பதிலடியை தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்;
ஜனாதிபதியாக ஒரு கிறித்தவரை எதிர்க்கட்சிகள் போட்டியிட வைக்க வேண்டும். வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள இவ்வளவு பெரிய சமூகம் இப்படி புறக்கணிப்படுவது ஜனநாயகத்துக்கு பெருமை சேர்ப்பதாகாது – தொல்.திருமாவளவன்.
2012-ல் அதே வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்த கிறித்தவர் பி.ஏ.சங்மா அவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவளவன் அவர்கள் சங்மா அவர்களுக்கு வாக்களிக்கவில்லையே ஏன்? ஆதரவு தர மறுத்தது ஏன்? அப்போது ஒரு கிறித்தவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று உருகவில்லையே, ஏன்? இப்போது கிறித்தவர்கள் மீது வந்துள்ள பாசம் அப்போது இல்லாமல் போனது ஏன்? அரசியலில் மதத்தை கலக்கும் திருமாவளவனின் அறிக்கை கிறித்தவ மதத்தின் மீதான அவரின் போலி பாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசியலில் மதத்தை கலக்கும் அநாகரீக அரசியலை திருமாவளவன் அவர்கள் கைவிட வேண்டும் திருமாவளவன் அவர்கள் 2012ல் ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.