ஸ்டாலின் சொன்ன குட்டிக் கதையைக் கேட்டு உ.பி.க்கள் திகைப்போய் நிற்க, நெட்டிசன்களோ இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு என்று கிண்டலடித்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் மேம்பால திறப்பு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலத்தை திறந்து வைத்து நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கோடம்பாக்கம் மேம்பாலம் கட்ட கலைஞர் நினைத்தது எப்படி? என்பது குறித்து தனது குழந்தை பருவத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசினார். “நான் சிறு குழந்தையாக இருந்தபோது கோடம்பாக்கம் பகுதியில் குடியிருந்தோம். அப்போது, வீட்டில் திறந்த நிலையில் சேஃப்டி பின் (ஊக்கு) தரையில் கிடந்தது. கைக்குழந்தையாக இருந்த நான், தரையில் தவழ்ந்து கொண்டிருந்தபோது அந்த ஊக்கை எடுத்து விழுங்கி விட்டேன்.
அதை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று வீட்டில் என்னவெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால், ஒன்னும் முடியவில்லை. அதன் பிறகு, டாக்டரிடம் கூட்டிக்கிட்டு போக முடிவு செய்து காரில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் வந்து நின்று விட்டோம். அந்த கேட் திறந்த பிறகுதான் மருத்துவமனைக்குச் சென்று ஊக்கை எடுத்தார்கள். திறந்த நிலையில் ஊக்கு வந்தது. அதனால்தான், எஃக்கையே விழுங்கிவிட்டு உயிரோடு இருக்கிறான். அதனால், எஃகு உள்ளம் கொண்ட ஸ்டாலின் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று கலைஞர் முடிவு செய்தார்.
நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி இதையெல்லாம் எழுதியிருக்கிறார். எதற்காக இதை இப்போது சொல்கிறேன் என்றால், ஊக்கை விழுங்கிய குழந்தையையே சாலை மார்க்கமாக எடுத்துக் கொண்டு போக முடியவில்லையே. அப்படி இருக்க, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மக்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல எத்தனை பேர் அவஸ்தைப் படுவார்கள். எனவே, இந்த இடத்தில் ஒரு பாலம் கட்டினால் என்ன? என்று அப்போதே கலைஞர் முடிவு செய்தார். அதற்கு பிறகுத்தான் அந்த இடத்தில் பாலம் உருவானது” என்று கூறினார்.
ஸ்டாலின் சொன்ன இந்தக் கதையைக் கேட்ட உ.பி.க்கள் பதறிப்போய் விட்டார்கள். ஆனால் நெட்டிசன்களோ, திறந்த நிலையில் விழுங்கிய ஊக்கை எப்படி அறுவைச் சிகிச்சை செய்யாமல் எடுக்க முடியும். வயிற்றில் குத்தி கிழித்து விடாதா? இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு என்று கிண்டல் செய்து வருகின்றனர்.