கோவை பாரதியார் பல்கலை கழக மாணவிகள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட பாரதியார் பல்கலை கழகம் கோவையில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. உள்ளூர் மற்றும் அண்டை மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் இக்கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நள்ளிரவில் மாணவிகள் இருக்கும் அறைகளின் கதவுகளை சில மர்ம நபர்கள் தட்டுவதும், ஜன்னல் கதவுகளை திறந்து எட்டி பார்ப்பது போன்ற சம்பவங்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவிகள், தங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளின் போராட்டத்தை அடுத்து, உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதிமொழி அளித்திருந்தது. ஏற்கனவே, தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த வகையில், சமூக விரோதிகள் தொடர்ந்து செய்து வரும் சேட்டைகள், கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் பயின்று வரும் மாணவிகளின் பெற்றோர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை பாரதியார் பல்கலை கழக துணை வேந்தர், ஈ.வெ.ரா குறித்த ஓர் கருத்தரங்கை அண்மையில் நடத்தினார். மாணவ, மாணவிகள் மீது ஈ.வெ.ரா சிந்தனைகளை திணிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். அந்த வகையில், ஈ.வெ.ரா.வின் நிகழ்ச்சிக்கு மேடை அமைத்து துணை போன வேந்தர் இப்பொழுது, என்ன செய்ய போகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.