கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் பலியானான். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடைய பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இவ்வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போத்தனூரை சேர்ந்த தாஹா நசீர் என்பவனை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.