கோவையில் கல்லூரியின் காம்பவுன்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை அருகேயுள்ள குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி வளாகத்தில் மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியைச் சுற்றி ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த 5 அடி உயர சுவர் வலுவிழந்த நிலையில் இருந்தது. ஆகவே, அச்சுவரை ஒட்டி 5 அடி தூரத்தில் கான்கிரீட்டாலான மற்றொரு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இப்பணியை சீனிவாசா கட்டுமான நிறுவனம் எடுத்து செய்து வருகிறது. இதற்கான அஸ்திவாரம் அமைக்க ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். மேலும், சிலர் விடுதி அருகே கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை முதல் கோவை பகுதியில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக, மாலையில் திடீரென பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், ஆந்திராவைச் சேர்ந்த கொல்லி ஜெகநாதன், நக்கிலா சத்யம், ரப்பாகா கண்ணையா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஸ்கோஸ், பருண் கோஸ் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதைக்கண்ட சக தொழிலாளர்களும், பொதுமக்களும் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து தீயணைப்புத்துறையினரும், போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், கொல்லி ஜெகநாதன், நக்கிலா சத்யம், ரப்பாகா கண்ணையா, பிஸ்கோஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். பருன் கோஸ் மட்டும் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பருன் கோஸும் இறந்து விட்டார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் உடலை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.
இந்த விபத்து தொடர்பாக, கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன், பொறியாளர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கூறுகையில், “கல்லூரி நிர்வாகத் தரப்பில் இருந்து சம்பவ இடத்திற்கு யாரும் வரவில்லை. போன் செய்தால் துண்டிக்கிறார்கள். ஒப்பந்ததாரர்தான் பொறுப்பு என்கின்றனர். அதிகாரிகள் நாளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள். கண்டிப்பாக நிர்வாகம் பதில் சொல்லியாக வேண்டும். 5 உயிர் பலியாகியுள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகத்தினர் அலட்சியமாக இருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகத்தின் மீது மாநகராட்சி சார்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, மாநகராட்சி கமிஷனர், கலெக்டர் ஆகியோரிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவை மாநகராட்சி சார்பில் போலீஸிலும் புகார் அளிக்கப்படும்” என்றார்.