12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமக திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த மகாமக குளத்தைச் சுற்றிலும் 16 சோடசலிங்க மண்டபங்கள் அமைந்துள்ளன. மாசி மகம், அமாவாசை போன்ற நாட்களில் மகாமக குளத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து குளத்தில் புனித நீராடுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் மகாமகம் குளத்தின் கரையில் ஏராளமான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, குளத்தில் புனித நீராடினர். அப்போது மகாமகம் குளத்தின் கிழக்கு மற்றும் தெற்கு கரையில் உள்ள வியாசேஸ்வரர், தினேச்சுவரர், பைரவேஸ்வரர் ஆகிய மூன்று சோடசலிங்க மண்டபங்களின் கோபுர சுற்றுச்சுவர் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ள நிகழ்வு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தர்ப்பணம் முடிந்து புரோகிதர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமின்றி தப்பினர்.
இதேபோல் குளத்தைச் சுற்றியுள்ள சோடசலிங்க மண்டபங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. இது பக்தர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவில்களையும் பக்தர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.