திமுக பதவி ஏற்றத்தில் இருந்து சில ஊடகங்கள் என்ன தான் சிக்சர், செஞ்சுரி என்று பந்தா காட்டினாலும். திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏகள், கட்சி நிர்வாகிகள் யாரும் சர்ச்சைகளில் சிக்காமல் இல்லை. அந்த வரிசையில் இப்பொழுது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிக்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஆலோசனை கூட்டதை, திருச்சி திமுக அலுவலகத்தில் வைத்து நடத்தியதோடு மட்டும்மல்லாமல்,அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை திமுக அலுவலகத்திற்கு வரவழைத்தது அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்னதான் அமைச்சராகவே இருந்தாலும் அதிகாரிகளை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து பேசுவது என்பது தவறான உதாரணமாகும். எதிர் வரும் காலங்களில் எல்லா அமைச்சர்களும் அதிகாரிகளை இதே போல் நடத்தினால் என்ன ஆகும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.