கம்யூனிஸ்ட் எம்.பி.சச்சிதானந்தம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். !

கம்யூனிஸ்ட் எம்.பி.சச்சிதானந்தம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். !

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ். பற்றி அவதூறான கருத்தை கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சச்சிதானந்தம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தென் பாரத ஊடகத்துறை செயலாளர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

ஹிந்து ஒற்றுமை மூலம் நாட்டு மக்களிடையே தேசபக்தியையும், தெய்வபக்தியையும் தட்டியெழுப்பி தேசிய புனர் அமைப்புப் பணியில் கடந்த 99 ஆண்டுகளாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) ஈடுபட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய தொண்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சார்பில் பாரத நாடு முழுவதும் 1.5 லட்சம் சேவைப் பணிகள் நடைபெறுகின்றன.

இளைஞர்களிடம் தேசபக்தி உணர்வு வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸில் அரசு ஊழியர்கள் சேரக் கூடாது என்று அன்றைய ஆங்கிலேய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அந்த உத்தரவு நீக்கப்பட்டது. கருத்துரிமையையும் விரும்பும் அமைப்பில் செயல்படும் சுதந்திரத்தையும் நமது அரசியல் சாசனம் வழங்கியது.

ஆனால், 1966ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஆர்.எஸ்.எஸ்.ஸில் மத்திய அரசு ஊழியர்கள் சேரக் கூடாது என்று உத்தரவிட்டார். ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அந்த உத்தரவை, 58 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றுக் கொண்டது. இது கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இன்றைய காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரசியல், ஆன்மீகம், கலாச்சாரம், தொழிற்சங்கம், சேவை, விவசாயம் என பல்வேறு துறைகளில் பல சாதனைகளைப் புரிந்து வருவது கண்கூடு. ஆர்.எஸ்.எஸ்.பயிற்சி பெற்ற தொண்டர்கள் நேர்மையுடனும் தீரத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியில ஈடுபடுவதை பலரும் கண்டு வியந்துள்ளனர்.

ஆனால், ஜனநாயக நெறிமுறைகளை நசுக்கிய உத்தரவை இப்போதைய அரசு நீக்கியதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக எம்.பி.க்கள் இருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. சச்சிதானந்தம், மகாத்மா காந்தியை கொலை செய்த இயக்கம் என்று ஆர்.எஸ்.எஸ். மீது அவதூறு பரப்பியுள்ளார்.

கடந்த 1948 இல் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். மீது அபாண்டமான பழி சுமத்தி தடை செய்யப்பட்டது. ஆனால், பிறகு ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கியது வரலாறு. மேலும் காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பல்வேறு விசாரணை கமிஷன்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

மேலும் 1934 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம், வார்தாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.முகாமுக்கு மகாத்மா காந்திஜி வருகை தந்தது வரலாறு. நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் தினசரி அதிகாலையில் பாடும் பிரார்த்தனையில் மகாத்மா காந்தி நினைவூட்டப்படுகிறார்.
ஆனால் சங்கத்தின் எதிரிகள் வழக்கம் போல காந்தி கொலையோடு முடிச்சுப் போடுவதும் பிறகு நாங்கள் வழக்கு தொடுத்தால் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோருவதும் தொடர்ந்து நிகழ்கிறது.

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் சீதாராம் கேசரி, அர்ஜுன் சிங், திக் விஜய் சிங் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸை காந்திஜி கொலையோடு சம்பந்தப்படுத்தி பேசி நீதிமன்றங்களில் அவதூறு வழக்கை எதிர்கொண்டனர். சமீபத்தில் கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தது. எனவே ஆர்.எஸ்.எஸ். மீதான அவதூறு கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சச்சிதானந்தம் திரும்பப் பெற வேண்டும்; மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி அவர் வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it

2 thoughts on “கம்யூனிஸ்ட் எம்.பி.சச்சிதானந்தம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். !

  1. ஜி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டப்படி வழக்கு தொடரலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *