இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு, சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், கடந்தாண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போதிருந்தே தமிழக அரசியல் நிலவரம் குறித்து, டெல்லியிலுள்ள பா.ஜ.க. முக்கியத் தலைவர்களுக்கு விரிவாக நோட் போட்டு அனுப்பி வருகிறார் ராம்குமார். சமீபத்தில் தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேஷம் நிகழ்ச்சிக்கு தடை விதித்த விவகாரம் தொடர்பாகவும், காசி விஸ்வநாதர் ஆலய விவகாரம் தொடர்பாகவும் விரிவாக நோட் போட்டு அனுப்பி இருந்தார் ராம்குமார். இதை பார்த்துவிட்டு, ராம்குமாரை பாராட்டி இருந்தார்கள் டெல்லி பா.ஜ.க. மூத்த தலைவர்கள். இந்த சூழலில், பிரதமர் மோடியை விமர்சிப்பதற்கு நடிகர் சிவாஜி கணேசனின் பெயரை பயன்படுத்தி இருந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். இதற்குத்தான் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, பிறரை தரமின்றி விமர்சிப்பதற்கு, நடிகர் சிவாஜியின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று முத்தரசனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக ராம்குமார் கணேசன் வெளியிட்ட அறிக்கை: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.யைச் சேர்ந்த முத்தரசன், பிரதமர் மோடியை விமர்சிக்கும் சாக்கில், நடிகர் திலகம் என்று போற்றப்படும் எங்கள் தந்தை சிவாஜி பெயரை தேவையின்றி இழுத்திருக்கிறார். சிவாஜிக்கும், பிரதமருக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தங்களின் இடைவிடாத, அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பால் உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். உங்களைப் போல மற்றவர் முதுகில் சவாரி செய்து வந்தவர் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுடன் எங்கள் தந்தை நட்புடன் இருந்தார். நெருக்கடியான காலங்களில் அவர்களுக்கு உதவியும் செய்தார். தனது உடல், பொருள், புகழ் ஆகியவற்றை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லா மல் நாட்டுக்காக அர்ப்பணித்தவர். நேர்மை, திறமை, கடின உழைப்பு காரணமாக அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. பல விருதுகளும் கிடைத்தன. எனவே, அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
சிவாஜி இன்று இருந்திருந்தால், பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் ஆதரித்திருப்பார். நான் பா.ஜ.க.வில் சேர்ந்ததையும் வரவேற்றிருப்பார். உலக அரங்கில் மோடியால் பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார். பாரத நாட்டின் மண் சார்ந்த கொள்கைகளை பிரதமர் மோடி கடைப்பிடித்து வருகிறார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், இதே பாணியை பின்பற்றி வெற்றி நடைபோடுகிறார். இடது, வலது என எந்தப் பக்கமும் திரும்பாமல், நேர்கொண்ட பார்வையில் எங்கள் தலைவர்களின் பயணம் தொடர்கிறது. ஆனால், நீங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அழிந்து வரும் சித்தாந்தத்தை பின்பற்றுகிறீர்கள். உங்களுடைய கருத்தில், இந்திய மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்த அறியாமை தெரிகிறது. பா.ஜ.க. அளித்ததாக நீங்கள் குறிப்பிட்ட வாக்குறுதியை நம்பி, மக்கள் கடன் வாங்கவில்லை. உங்கள் கூட்டணிக் கட்சியான தி.மு.க. அளித்த வாக்குறுதிதான் மக்களை கடன் வாங்க வைத்தது. இவை எல்லாம் பொதுவெளியில் இருக்கும் தகவல்கள். “Little knowledge is dangerous” (அரைகுறை ஞானம் ஆபத்தானது) என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அந்த வகையில், அரைகுறை ஞானம் ஆபத்தானது என்பதை உங்கள் அறிக்கை நிரூபிக்கிறது.
உங்கள் கருத்துக்கள் வன்முறை, தேசத்துரோகம் மற்றும் இந்தியாவை பிரித்து ஆட்சி என்கிற கொள்கையை மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றன. முதலில் இந்தியா என்கிற தேசபக்தியை நோக்கி நமது பிரதமரும் பா.ஜ.க.வும் பாடுபடுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனையும் மதிக்கிறோம். வெளிநாட்டு சித்தாந்தங்களால் வடிவமைக்கப்பட்ட மற்றும் தேசவிரோதிகளால் நிதியளிக்கப்பட்ட ஒரு நபர் உயர்ந்த தார்மீக தளத்தை எடுத்து மற்றவர்களுக்கு விரிவுரை செய்ய முடியாது. சிவாஜி கணேசனை பாராட்டுவதை வரவேற்கிறோம். ஆனால், பிறரை தரமின்றி விமர்சிப்பதற்கு அவரது பெயரை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அவர் உங்கள் காரணத்தை விட மிகவும் பெரியவர். இன்றைய இந்தியாவில் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை தோழரே” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.