கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பையின் 37ஆவது லீக் போட்டியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவை 83 ரன்களுக்கு ஆள் அவுட் செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கியமான 37ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். இந்திய அணி 5 ஓவர்களிலேயே 60 ரன்களை கடந்துவிட்டது. விராட் கோலி 101 ரன்னும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது.
அதன் பிறகு அடுத்தடுத்து ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவ்வும் கடைசி விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை முடித்துக் கொடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மார்கோ யான்சென் 14 ரன்கள் எடுத்தார். இந்த உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து புதிய வரலாற்று சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.
இதன் மூலமாக இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேலும், அதிகபட்சமாக 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், நமது கிரிக்கெட் அணி மீண்டும் வெற்றி! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். சிறந்த குழுப்பணி. இன்று அருமையான இன்னிங்ஸ் ஆடிய விராட் கோலிக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசையும் வழங்கியுள்ளனர். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.