சமீபத்தில் டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்றம் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் 141 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதை போன்று கிண்டலடித்து அனைவரின் முன்னிலையிலும் செய்து காட்டினார். இதனை மிகவும் உற்சாகமாக அங்கிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக தன்கர் கோத்ராவைச் சேர்ந்தவர்கள், பஞ்சாயத்தை கூட்டி மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள 62 கிராமங்களில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளனர். மேலும் மிமிக்ரி எபிசோடை பதிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஜாட் சமூக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துணை ஜனாதிபதியை அவமதிக்கும் அரசியல்வாதிகள் மன்னிப்பு கேட்காவிட்டால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவும் பஞ்சாயத்து முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
source : opindia