தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க மூத்த தலைவர் குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991- ஆம் ஆண்டு மே 21 தேதி மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், இந்தியாவையும் கடந்து உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலில், 16 பேர் உடல் சிதறி பலியாகினர். இதையடுத்து, எல்.டி.டி.இ அமைப்பிற்கு இந்தியாவில் நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
இந்த கொடூர குற்ற செயல் புரிந்தவர்களில் பேரறிவாளனும் ஒருவர் என்பதை நாடே நன்கு அறியும். இதனை தொடர்ந்து, நீதிமன்றம் அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் அது அயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 31 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து விட்டார் என்று கூறி நேற்றைய தினம் அவர் விடுதலை செய்யப்பட்டார். உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பினை தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று இருந்தன. ஆனால், தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வெறும் கண் துடைப்பு அறிவிப்பை மட்டுமே வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் பிரபல நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பகீர் சவால் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது; பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரஸின் நடவடிக்கை இருக்கிறது என முதலமைச்சர் பேரறிவாளனை கட்டித்தழுவும் புகைப்படத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.