காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக 100-ஐ தொட முடியவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த இடங்களை விட, பாஜக மட்டுமே பெற்ற இடங்கள் அதிகம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மையை விட 20 இடங்கள் அதிகமாக கிடைத்துள்ளது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்திருப்பது பெரும் சாதனை.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்திருப்பது வரலாற்று வெற்றி.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது. இந்த வெற்றி என்பது சாதாரணமானது அல்ல. வரலாற்று வெற்றி. சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டுகளில், நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவால் மட்டுமே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முடிந்தது. இந்திய அரசியலில் 17 ஆண்டுகள் பெரும் செல்வாக்குடன் வலம் வந்த இந்திரா காந்தியால் கூட தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி, தான் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்றுப் போனார்.
இந்திரா மறைவுக்குப் பிறகு 1984-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த ராஜிவ் காந்தியால், இரண்டாவது முறை ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு நடந்த 1991 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 244 இடங்களே கிடைத்தன. பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் நரசிம்மராவ் தலைமையில் 5 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி நடந்தது.
1989-ல் இருந்து இந்தியாவில் கூட்டணி ஆட்சிக் காலம் தொடங்கியது. 2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல் நாள் வரைகூட, “இனி இந்தியாவில் கூட்டணி ஆட்சி தான். எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது” என்றே அனைவரும் நம்பினார். ஆனால், 2014-ல் 282, 2019-ல் 303 என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. 1984 அதாவது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைத்தது அதுவே முதல்முறை.
1962-க்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ள
பாஜக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழுமையாக நல்லாட்சியை வழங்கும். ஏனெனில்
கூட்டணி ஆட்சியை வழிநடத்துவதில் பாஜகவுக்கு நீண்ட அனுபவம் உள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக 20-க்கும் அதிகமான கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியை முழுமையாக 5 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக நடத்தியது பாஜக தான். அதன் பிறகு தான் இந்தியாவில் கூட்டணி ஆட்சியை முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்கும் நடத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.
1999-ல் கூட்டணி ஆட்சியை வாஜ்பாய் வெற்றிகரமாக நடத்தியபோது பாஜக பெற்ற இடங்கள் 182 மட்டுமே. ஆனால், இப்போது பாஜகவுக்கு மட்டுமே 240 எம்பிக்கள் உள்ளனர். அதுவும் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சிக்குப் பிறகு. எவ்வளவு பெரிய சாதனை. 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியை தக்க வைப்பதே பெரும் சாதனை. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக 100-ஐ தொட முடியவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த இடங்களை விட, பாஜக மட்டுமே பெற்ற இடங்கள் அதிகம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மையை விட 20 இடங்கள் அதிகமாக கிடைத்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியை எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும், நடுநிலையாளர் போர்வையில் பாஜகவை மட்டும் எதிர்ப்பவர்களும், பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி என்பதைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் ஊடகங்களில் அவ்வாறே விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கும் தேவையான இடங்களை தாண்டி வெற்றி பெற்றிருப்பது பெரும் சாதனை. வரலாற்று வெற்றி.