தகுதி நீக்கம் செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதற்கு எதிரான வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இதனால் அவரது மக்களவை எம்.பி பதவி பறிக்கப்பட்டது.
ராகுல் காந்தி மீதான இந்த தகுதி நீக்கம் நடவடிக்கைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் தரப்பிலும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தியாவில் ராகுல் காந்திக்கு முன்பாக இதுபோல் சட்ட நடவடிக்கைகள் காரணமாக பதவி இழந்த அரசியல் தலைவர்கள் சிலர் உள்ளனர். அவர்களின் விவரம் :
ஜெயலலிதா
பின்னர் 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டான்சி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலகினார். அவருக்கு பதிலாக இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார்.
இறுதியில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு 4 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது ஜெயலலிதா மீண்டும் தன் முதல்வர் பதவியை இழந்தார்.
லாலு பிரசாத் யாதவ்
பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் கடந்த 2013ம் ஆண்டு எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் 11 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.
இதே வழக்கில் 2000ம் ஆண்டில் தன் முதல்வர் பதவியையும் லாலு பிரசாத் யாதவ் இழந்தார். அப்போது அவருக்கு பதிலாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி பீகாரின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
ரஷீத் மசூத்
வி.பி. சிங் பிரதமராக இருந்த போது 1990-91ம் ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ரஷீத் மசூத், மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி பதவியை இழந்தார்.
அசம்கான்
உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் அசம்கான். இவர் கடந்த மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் குறித்து அவதூறாக பேசியதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது.
இவர்களை தவிர லட்சத்தீவு எம்.பியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல், கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் மேல்முறையீடு வழக்கில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் அவரது தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் திமுக மாநிலங்களவை எம்.பியாக இருந்த செல்வ கணபதி கடந்த 2014 ஏப்ரல் மாதம் சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் எம்.பி பதவியை இழந்தார்.
இவ்வாறு கட்சி பாகுபாடு இல்லாமல் இந்தியாவில் சிறை தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் பதவியை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ராகுல் காந்தியை விட வயதிலும் அரசியல் அனுபவத்திலும் மூத்தவர்கள். அப்படி இருக்கையில் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் குறை கூறுவது வேடிக்கை தான்.