பேரறிவளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது தி.மு.க கூட்டணியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், இந்தியாவின் ஆறாவது பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர், கடந்த 1991- ஆம் ஆண்டு மே 21 தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த துயர நிகழ்வில் 16 நபர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு விடுதலை புலிகளின் தற்கொலைப் படையே காரணம் என்று கூறப்படுகிறது. குண்டுவெடிப்பின் போது மரணமடைந்தவர்கள்; தர்மன்: காவலர், சந்தானி பேகம்: மகளிர் காங்கிரஸ் தலைவர், ராஜகுரு: காவல் ஆய்வாளர், சந்திரா: மகளிர் காவலர், எட்வர்டு ஜோசப்: காவல் ஆய்வாளர், கே. எஸ் முகமது இக்பால்: காவல்துறைக் கண்காணிப்பாளர். லதா கண்ணன்: மகளிர் காங்கிரஸ் உறுப்பினர், டேனியல் பீட்டர்: பார்வையாளர், கோகில வாணி: லதா கண்ணனின் பத்து வயது மகள், லீக் முனுசாமி: காங்கிரஸ் பிரமுகர், சரோஜா தேவி: 17 வயது கல்லூரி மாணவி, பிரதீப் கே குப்தா: ராஜீவ் காந்தியின் பாதுகாப்பாளர், எத்திராஜூ முருகன்: காவலர், ரவிச்சந்திரன்: கமாண்டோ வீரர் மேலும் காவல் துணை ஆய்வாளர் அனுசுயா டெய்சி உட்பட 43 நபர்கள் காயமுற்றனர்.
இந்த கொடூர குற்ற செயல் புரிந்தவர்களில் பேரறிவாளனும் ஒருவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பேரறிவாளன் தாய் நடத்திய நீண்ட சட்ட போராட்டத்தை அடுத்து அது அயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் வரவேற்றுள்ளனர்.
இந்தநிலையில், பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டம் நடத்தும் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இவரின், கருத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில், இது தி.மு.க கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.