ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி மன்னிப்புக்கோர வேண்டும் என்று பா.ஜ.க.வும், தேசிய மகளிர் ஆணையமும் வலியுறுத்தி இருக்கிறது.
நமது நாட்டைப் பொறுத்தவரை, ஹிந்துக்களும், ஹிந்து கடவுள்களும் நிந்திக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவோ, ஹிந்துக்களுக்கும், ஹிந்து மதத்துக்கும் ஆதரவாகவோ கருத்துத் தெரிவித்தால், எதிர்க்கட்சியினர் அவர்களை கேலி, கிண்டல் செய்வதும், அவர்கள் மீது தனி மனித தாக்குதலில் ஈடுபடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், நாட்டின் உயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் கட்சியினரால் தனி நபர் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு காங்கிரஸ் எம்.பி.யால் ராஷ்டிர பத்னி என்று கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டார் ஜனாதிபதி முர்மு. தற்போது, மற்றொரு காங்கிரஸ் நிர்வாகியால் ஜாதி ரீதியாக தாக்கப்பட்டிருக்கிறார்.
குஜராத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘குஜராத் மாநிலத்தில் 76% உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வகையில், நாட்டு மக்கள் பெரும்பாலும் குஜராத் உப்பைத்தான் உண்கிறார்கள்’ என்று கூறினார். இவரது பேச்சை கடுமையாக விமர்சித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் உதித் ராஜ், ‘அனுகூலத்தை பெறுவதற்காக முக்கியமான நபர் ஒருவரிடம் கீழ்த்தரமாக நடந்து கொள்வதைப் போல, திரவுபதி முர்முவின் பேச்சு இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் உப்பை மட்டுமே தின்று பாருங்கள். அப்போது என்ன நடக்கிறது என்பது தெரியும். திரவுபதி முர்முவை போன்ற ஒருவர் எந்த நாட்டிற்கும் ஜனாதிபதியாக வரக் கூடாது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
உதித் ராஜின் இக்கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், “பழங்குடியினரை அவமதிப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. இப்படித்தான் ஏற்கெனவே ஜனாதிபதி முர்முவை அவமதிக்கும் வகையில் ராஷ்ட்ர பத்னி என்று காங்கிரஸ் லோக்சபா எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார். பிறகு மன்னிப்புக் கேட்டார். தற்போது ஜனாதிபதி முர்முவையும், அவர் சார்ந்த பழங்குடியின மக்களையும் உதித் ராஜ் விமர்சித்திருக்கிறார். இதன் வாயிலாக பழங்குடியினருக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனப்போக்கு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறுகையில், ‘ஜனாதிபதிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இது, அக்கட்சியின் பழங்குடியின விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும்,’ என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க.வின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான ஷெசாட் பூனாவாலா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தாஜா செய்பவர் என்று ஜனாதிபதியை விமர்சிதிருக்கும் உதித் ராஜை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதற்கு பதிலளித்திருக்கும் உதித் ராஜ், “ஆதிவாசிகளை தலித்துகள் விமர்சிப்பார்கள். அவர்களுக்காக போராடவும் செய்வார்கள். ஆகவே, தலித் என்கிற வகையில் ஆதிவாசியான திரவுபதி முர்முவை விமர்சிக்க எனக்கு உரிமை உண்டு. ஜனாதிபதி பதவியுடன் இணைத்து தனது கருத்தை புரிந்து கொள்ளக் கூடாது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் உயர் பதவி கிடைத்ததும், தங்கள் சமுதாயத்தை மறந்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. அந்தக் கவலையில்தான் அவ்வாறு கூறினேன். எனது கருத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், உதித் ராஜின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “நாட்டின் உயரிய பதவியை வகிக்கும் ஒருவரை, தனது கடின உழைப்பால் உயர்ந்த ஒரு பெண்மணியை தகாத வார்த்தையால் பேசி இருப்பது கண்டனத்திற்குரியது. அவமதிக்கும் வகையிலான தனது பேச்சுக்காக உதித் ராஜ் மன்னிப்புக் கோர வேண்டும். இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். உதித் ராஜ் ஏற்கெனவ பா.ஜ.க.வில் இருந்தவர் என்பதும், 2014 -2019 காலக்கட்டத்தில் வடமேற்கு டெல்லி தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.