பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தருவதாக தமிழகத்திலும் உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிப்பதாக காங்கிரசார் ஓட்டு வேட்டை நடத்திய வீடியோ வைரலாகியுள்ளது. தமிழகத்தில் காங்., போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வென்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் வெற்றிப்பெற்றால் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்குடும்ப தலைவிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதனை முன்னிலைப்படுத்தி நாடு முழுவதும் பிரசாரமும் செய்தது.
ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக கூறி, வீடு வீடாக காங்கிரசாரும் உத்தரவாத பிரசுரங்கள் வழங்கி இருந்தனர். தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 234 இடங்களில் வென்றது. காங்கிரஸ் மட்டும் 99 இடங்களை பெற்றன.
இதனால் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தபடி ஏழை குடும்ப தலைவிக்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என வலியுறுத்தி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பெண்கள் உத்தரவாத பிரசுரங்களுடன் காங்கிரஸ் அலுவலகத்திற்கு படையெடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழகத்திலும் மக்களிடம் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை உத்தரவாத பத்திரமாக அளிப்பதாக கூறி காங்கிரசார் ஓட்டுப்பெற்ற வீடியோ வைரலாகியுள்ளது.
வீடியோவில் பெண்மணி ஒருவரிடம் காங்கிரசார், ‘வெற்றி பெற்றால், ஒரு லட்சம் ஊதியத்துடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி, மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை அளிப்போம், விவசாய கடன்கள் தள்ளுபடி, தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்துவோம். இதனை உத்தரவாத பத்திரமாக எழுதி ராகுல், மல்லிகார்ஜூன கார்கே கையெழுத்துப்போட்ட பத்திரத்தை இளைஞர் காங்கிரசில் இருந்து தருகிறோம்’ எனக் கூறி அப்பெண்மணியிடம் பெயர், விலாசத்தை கேட்டு எழுதுகின்றனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டு தருவதாக கூறி, கவர்ச்சி அறிவிப்புகளுடன் கூடிய வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பெண்களிடம் அளித்து, ஓட்டு பெற்று வென்றதால், இப்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிலர் காங்கிரசாரிடம் கேட்டு வருகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வென்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.