காங்கிரஸில் அடுத்த விக்கெட் ‘காலி’!

காங்கிரஸில் அடுத்த விக்கெட் ‘காலி’!

Share it if you like it

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் அடுத்த விக்கெட் காலியாகி இருக்கிறது. தொடர் விக்கெட் வீழ்ச்சியால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் சரி, தேர்தல் தோல்விக்குப் பிறகும் சரி காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க., சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில், குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்து படேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல், கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து, தனது பதவியையும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜி-23 தலைவர்களில் ஒருவருமான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கபில் சிபல் கட்சியிலிருந்து விலகி, சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், தற்போது கர்நாடகாவிலும் மூத்த தலைவர் ஒருவர் காங்கிரஸிலிருந்து விலகியிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான பிரிஜேஷ் கலப்பா, 1997-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுமார் 25 ஆண்டுகள் மாநில காங்கிரஸில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். இவர்தான், தற்போது திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருக்கிறார். இதுதொடர்பாக பிரிஜேஷ் கலப்பா கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கட்சியின் நலனுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை கட்சித் தலைமை வழங்கவில்லை. ஆகவே, கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இவர், ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக தனியார் ஊடகம் ஒன்றுக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் கவிதா ரெட்டி, எம்.எல்.சி. தேர்தல் வேட்பாளர் தேர்வு பட்டியலில், தன்னுடைய பெயர் இடம்பெறாததை கண்டித்து, இந்திய தேசிய காங்கிரஸ் ஏன் 50 சதவிகித மக்களை புறக்கணிக்கிறது என்று சாடியிருந்தார். அதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரான நடிகை நக்மா, தனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்காததை கண்டித்து, நான் கட்சியில் சேரும்போது ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார். ஆனால், நான் 18 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏன் அந்தப் பதவிக்கு நான் தகுதியானவள் இல்லையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஆக, காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் பலரும் விலகி வருவதால் அக்கட்சி தேய்ந்து வருகிறது.


Share it if you like it