தண்டவாளத்தில் சூடு தாங்க முடியாமல் காங்கிரஸ்காரர்கள் ஓட்டம் எடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யுமாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். மேலும், மோடி சமூகத்தை தரக்குறைவாக பேசியிருந்தார். இவரது, கருத்து அச்சமூகத்தினரிடையே கடும் கோவத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்தார். மேலும், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுல் காந்திக்கு ஆதரவாக ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். காவல்துறையினரும் அவர்களை தடுக்கவில்லை. உச்சி வெயில் என்பதால் சூடு அதிகமாக இருந்துள்ளது.
இதையடுத்து, காங்கிரஸார் போராட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஓட்டம் எடுத்துள்ளனர். இதனை, பார்த்து காவல்துறையினருடன் சேர்ந்து பொதுமக்களும் சிரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.