காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இதுவரை 7 கிரிமினல் வழக்குகளில் ஜாமீன் பெற்றவர் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.
2019-ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின்போது, கோலாரில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்கிற குடும்பப் பெயர் இருப்பது எப்படி?” என்று பேசியிருந்தார். இது மோடி என்கிற சமூகத்தை இழிவுபடுத்துவது போல் இருப்பதாகக் கூறி, குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த அவதுாறு வழக்கில், ராகுலை குற்றவாளி என்று அறிவித்த சூரத் நீதிமன்றம், 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இவ்வழக்கில், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், ராகுல் காந்தி 7 கிரிமினல் வழக்குகளில் ஜாமீன் பெற்றவர் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நேஷனல் ஹெரால்டு உட்பட நாடு முழுதும் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் ஏற்கெனவே ராகுல் காந்தி, ஜாமீன் பெற்றுத்தான் வெளியில் இருக்கிறார். பாராளுமன்றம், சட்டம், நாடு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக ராகுல் தன்னை நினைக்கிறார். காந்தி குடும்பத்தில் இருந்து வந்ததால் கிடைக்கும் சிறப்புரிமை இது என்றும் அவர் கருதுகிறார்” என்று கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தி ஜாமீனில் இருக்கும் வழக்குகள் இதுதான்… 2015-ம் ஆண்டு பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் ராகுல், அவரது தாயார் சோனியா காந்தி ஆகிய இருவரும் ஜாமீனில் இருக்கிறார்கள். 2019-ம் ஆண்டு ஜூலை மாதம், பீஹார் துணை முதல்வராக இருந்த சுஷில் குமார் மோடி குறித்தும், அவரது சமுதாயம் குறித்தும் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாட்னா கோர்ட் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது. அதே 2019-ம் ஆண்டு, மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி தொடர்ந்த வழக்கில், ஆமதாபாத் கோரட்டில் ஜாமீன் பெற்றார். அதேபோல, 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மும்பை கோர்ட் ஜாமீன் வழங்கியது.