திமுக மேயர்களுக்கு தொடரும் சிக்கல் !

திமுக மேயர்களுக்கு தொடரும் சிக்கல் !

Share it if you like it

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் மேயராக பதவி ஏற்றார்.’

காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது. திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை கழகம் சார்பில், திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அன்றைய தினம் 51 கவுன்சிலர்களும் கலந்து கொள்ளாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் திமுகவின் தற்போதைய மேயர் மகாலட்சுமி யுவராஜ் பதவி தப்பியது.

தற்பொழுது மேயர் நம்பிக்கையில்லா தீர்மானம் பிரச்சனை ஓய்ந்த நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் மாநகராட்சி கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி கூட்டத்தை எந்தவித பிரச்சனை இன்றியும், போதிய கவுன்சிலர்களுடன் நடத்த வேண்டிய சவால் மேயர் மகாலட்சுமிக்கு ஏற்பட்டுள்ளது. மேயருக்கு எதிராக இருக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தன்று வெளிநடப்பு செய்தால் அல்லது கலந்து கொள்ளாமல் இருந்தால் மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். அதாவது 17 கவுன்சிலர்களின் ஆதரவு மேயருக்கு தற்பொழுது தேவைப்படுகிறது.‌ ஆனால் மேயர் தரப்பில் தற்பொழுது 13 ஆதரவு கவுன்சிலர்கள் உள்ளனர். எனவே ஒரு சில அதிமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவை பெற மேயர் தரப்பு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *