கோவை உப்பிலிபாளையம் பகுதியில் சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரின்ஸ் கால்வின் என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார். தேவாலயத்தில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் அனைத்தும் தேவாலயத்தின் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆலயத்தில் ஒரு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரின்ஸ் கால்வின் பேசியுள்ளார். அதில், இந்து மற்றும் கிறிஸ்துவ சமூகங்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் விதமாக பிரின்ஸ் கால்வின் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வீடியோ காட்சிகள் பேஸ்புக் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசியதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது சாதி, மத, இனங்களிடையே விரோத உணர்ச்சியை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தான் பேசிய கருத்து இந்து சகோதரர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. இதனால் ஒரு சிலர் அந்த கருத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். என்னுடைய நோக்கம் எவரையும் புண்படுத்துவது இல்லை.
கலாச்சார சீரழிவு மற்றும் சாதி ஏற்றத்தாழ்வு குறித்து நான் பேசினேன். என்னுடைய பேச்சால் புண்பட்ட இந்து சகோதர, சகோதரிகளிடம் நான் முழு மனதளவில் என்னுடைய வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று வீடியோ பதிவில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் பிரின்ஸ் கால்வினை கைது செய்ய வேண்டும் என இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தனது தரப்பில் இருந்து மன்னிப்பு கேட்டு பாதிரியார் பிரின்ஸ் கால்வின் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.