ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார். இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டில் வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார். மோடியை போப் பிரான்சிஸ் சந்தித்தது தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளது. அதில், “கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு போப் பிரான்சிசுக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்த பதிவு சர்ச்சையான நிலையில், கிறிஸ்தவர்களை கேரள காங்கிரஸ் கட்சி அவமதித்துவிட்டதாக பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. போப் – மோடி சந்திப்பை கேலி செய்து பதிவிட்டதற்கு கேரள காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோரியது. ”கிறிஸ்தவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்” என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.