நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தளூர் உள்ளிட்ட கிராமங்களில் குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துவ மிஷனரிகள் பழங்குடியின மக்களை ஆசை வார்த்தைகள் கூறி மதமாற்றி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
சர்ச்சுக்கு வந்து பிரேயர் செய்தால் பணம் கொடுப்பதாக கூறி கிறிஸ்துவ மிஷனரிகள் பழங்குடியின மக்களை மதமாற்றி வருகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என பலரும் தங்கள் பணிகளை விட்டுவிட்டு கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் சிறப்பு ஆராதனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நாளைடைவில் அவர்களும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விடுகின்றனர்.
இவ்வாறு போத்துக்கொல்லி, பனிக்கல் கிராமங்களில் வசிக்கக்கூடிய 100 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களை மூளை சலவை செய்து கிறிஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காட்டு நாயக்கர் சங்க தலைவர் சந்திரன் கூறியதாவது :-
கிராமத்தில் ஏழ்மையில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்களிடம் கிறிஸ்துவ மிஷனரிகள் ஆசை வார்த்தைகள் கூறி மதமாற்றி வருகின்றனர். இதனால் நமது கலாச்சாரம் பண்பாடு முற்றிலும் அழிக்கப்பட்டு அவர்களின் உணவு முறையிலும் முழுவதும் மாறிவிடுகிறது.
மதமாற்றம் தடை சட்டம் மாநில அரசு கொண்டு வந்தும் மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், மற்றும் எஸ்பிக்கு புகார் அளித்துள்ளோம். அதிகாரிகள் ஆய்வு செய்து மதமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், காட்டு நாயக்கர் சங்க தலைவர் சந்திரன் கூறினார்.