மேற்கு வங்கத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்கள்தேர்வில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த ஊழல் வழக்கு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த ஊழல் தொடர்பாக மேற்குவங்க கல்வித்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி உட்பட திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியுடன் நெருக்கமாக இருந்த நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் அமலாக்கத்துறை கடந்த 2022-ம் ஆண்டு நடத்திய சோதனையில் ரூ.21 கோடி ரொக்கம், பல லட்சம் மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் இந்த ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் பபதித்யா தாஸ்குப்தா மற்றும் தேவ்ராஜ் சக்கரவர்த்தி ஆகியோரிடம் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.