செந்தில்பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் பா.ஜக. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், “அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் செய்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. குற்றம்சாட்டியது.
மேலும், செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் வலியுறுத்தி இருந்தார். தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்திருக்கிறது. மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பா.ஜ.க. அரசு, சட்டத்தின்படியே அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
ஆனால், இதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசைதிருப்பும் முயற்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இது கடும் கண்டனத்திற்குரியது. அ.தி.மு.க.வில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில்பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதராகி விட்டாரா? தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில்பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?. செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது.
அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம், அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால், அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அனுமதிக்காது. பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உணர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.