கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் : குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன் !

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் : குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன் !

Share it if you like it

பாஜக அகில இந்திய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்கப்படுவது கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் அந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு சுற்றியுள்ள மாவட்டங்களில் விற்கப்படுவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்போது திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கும் மட்டும் தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது.

இதற்கு காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பால்தான் கள்ளச்சாராயம் தடையின்றி விற்கப்படுவதாக மக்கள் சொல்கிறார்கள். எனவே, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களையும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சியினர், காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் குடித்து இவ்வளவு பேர் உயிரிழந்த பிறகும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் உண்மையை மறைத்து திசைதிருப்ப முயன்றுள்ளனர். உண்மை அம்பலமாகி விட்டதால் வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

இது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்து விடக்கூடாது. கள்ளக்குறிச்சியில் 10க்கும் அதிகமானோர் உயிரிழக்கக் காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *