பட்டியலினத்தவருக்கு நேர்ந்த கொடுமை : சமூக நீதி பேசும் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா ?

பட்டியலினத்தவருக்கு நேர்ந்த கொடுமை : சமூக நீதி பேசும் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா ?

Share it if you like it

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் :-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியர் பதவி மறுக்கப்பட்டதாக பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் பரப்பரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

ராமதாஸ் கண்டனம் :-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத் தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை நியமித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். பேராசிரியை தனலட்சுமிக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

கல்வியியல் துறையின் பொறுப்புத் தலைவராக இருந்த முனைவர் பெரியசாமி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், துறையின் மூத்த பேராசிரியரான தனலட்சுமிக்கு தான் அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தகுதியும், பணி மூப்பும் இல்லாத வெங்கடேஸ்வரன் என்பவருக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

துறைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஸ்வரன் பேராசிரியர் தகுதியை எட்டாதவர். அவர் கடந்த ஆண்டு தான் கல்வியியல் துறையில் பணியில் சேர்க்கப்பட்டார். எடப்பாடியில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர். உறுப்புக் கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் கல்வியியல் துறையில் தற்காலிக அடிப்படையில் அயல்பணி முறையில் வெங்கடேஸ்வரன் சேர்க்கப்பட்டார். விதிகளின்படி அவர் இணைப் பேராசிரியராகத் தான் கருதப்பட வேண்டும். ஆனால், அந்த தகுதி கூட இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, வெங்கடேஸ்வரன் அவரை எடப்பாடி கல்லூரியில் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இத்தகைய சூழலில் பேராசிரியர் நிலையில் இருப்பவரை புறக்கணித்து விட்டு, இணைப்பேராசிரியர் நிலையில் உள்ளவரை துறைத்தலைவராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்?

பேராசிரியை தனலட்சுமி பட்டியலினத்தவர் என்பதாலேயே அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தகுதியும், அனுபவமும் இல்லாத வெங்கடேஸ்வரன் துணைவேந்தருக்கு நெருக்கமானவர் என்பதாலேயே பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது பெரும் சமூக அநீதி ஆகும். அதுவும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நாளையுடன் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் இத்தகைய ஆணையை பிறப்பிக்க தார்மீக அடிப்படையில் உரிமை இல்லை. துணைவேந்தரின் இந்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலின மாணவர்களுக்கு திறன் மேம்பாடு வளர்க்கும் திட்டத்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்துவதிலும் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்காமல் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இத்திட்டப்படி பயிற்றுனர்களாக பணியில் சேர்க்கப்பட்ட 17 பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடுகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆணையிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை பல்கலை கழகம் :-

தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்களில் பட்டியலினத்தவருக்கு எதிராக நடப்பது இது முதல் முறை அல்ல.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழகத்தில் 17 உதவி பதிவாளர்கள், 17 பிரிவு அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்தப் பணியிடங்களை பட்டியல் இனத்தவருக்கு வழங்க வேண்டும் என்பதால் பல்கலைக்கழகம் நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக சென்னை பல்கலை கழக டாக்டர் அம்பேத்கர் பட்டியல் இன ஊழியர்கள் நலச்சங்கம் குற்றஞ்சாட்டினர். இதனை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர் அலுவலகம் முன்பு டாக்டர் அம்பேத்கர் பட்டியல் இன ஊழியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் காளிதாஸ் தலைமையில் அறவழி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் ஏராளமாக உள்ளது. அதனை பற்றி நமது மீடியான் செய்தியிலும் வெளியிட்டுள்ளது.வெற்று அறிக்கையிலும் மேடை பேச்சிலும் மட்டும் சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பட்டியலின மக்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு நடவடிக்கை எடுப்பாரா ?


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *