சிஎஸ்ஐஎஸ் (CSIS) (centre for south indian studies) என்னும் அமைப்பானது “மெட்ராஸின் முதல் பூர்வீக குரல்: காசுலூ லக்ஷ்மிநரசு செட்டி” என்ற புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த திரு.குமரேசன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை முன் நின்று நடத்தினர். அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது :-
நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது 25ஆவது வயதில் இன்னுயிரை ஈந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன். இந்த இடத்தில் அவருக்கு என் மரியாதையையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் 19ஆம் நூற்றாண்டில் நமது தாய்வழி கல்வி நிலையங்களை மூடிவிட்டனர். இதன் காரணமாகவே நாம் கல்வி கற்க முடியாத சூழல் உருவானது. அப்போது வள்ளலார் தான் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நமது நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார். அவரது சேவையை மறக்க முடியாது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகே சாதி என்பது இந்தியாவிற்குள் நுழைந்தது. நமது கல்வி முறையையும் ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்தனர். “1823ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள அனைத்து ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அளிக்கப்பட்டு நமது தாய் வழிக் கல்வி ஆராயப்பட்டது. அப்போதே ஜாதி, மத, பாலின பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மெட்ராஸ் மாகாணத்தில் பல மொழி பேசுவோர் இருந்தனர். இதனால் தமிழ், கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் என தனித்தனியாக ஒவ்வொரு தரப்பினருக்கு ஏற்றார் போலக் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இதற்கான ஆதாரம் எல்லாம் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1820களில் நம் சமூகத்தில் இருந்த கல்வி முறையில் மாணவர்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கல்வி முறை சிறப்பாக இருந்தது பாடத்தில் மொழி, இசை, ஓவியம் என்று பல விஷயங்கள் கற்பிக்கப்பட்டன. இந்த கல்வி முறையை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்தனர்.
மேலும், ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு நமது நாட்டில் சாதிகள் இல்லை. பிராமண, சத்திரிய, வைஷ்ணவ, சூத்திர என 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன. இதை இங்குத் தவிர முஸ்லிம்கள் இருந்தார்கள். ஆனால் அப்போது நமது நாட்டில் சாதி இல்லை.
கல்வி கற்றுத் தருவதை புண்ணியம் எனக் கருதப்பட்டது. இதனால் கல்வி கற்பிப்பதை அன்று அவர்கள் வணிகமாகக் கருதவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த பிரமாணர்களால் கல்வி கற்றுத் தரப்பட்டது. ஆசிரியர்களுக்கு வாழத் தேவையான உதவிகள் மட்டுமே சமூகத்தால் செய்து தரப்பட்டன. சிறப்பாக இருந்த நம் கல்விமுறையை ஆங்கிலேயர்கள் ஆய்வு செய்து திட்டமிட்டு அழித்தார்கள். 1823ஆம் ஆண்டிலேயே நமது 630 பள்ளிகள், 69 கல்லூரி தரத்திலான பள்ளிகள் இருந்துள்ளன” என்றார். மறைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர்கள்: மேலும், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் மறைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர்களின் வாய்ப்பை பாடமாக்குவேன் என்ற அவர், 20ஆம் நூற்றாண்டில் இருந்தே சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்வு திரித்துக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டிற்காக என்ன தியாகங்கள் செய்தனர் என்பது பலரால் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாகவும் அவர் பேசினார்.