காரில் பயணம்… கையில் மது பாட்டில்… ஸ்டாலின்தான் வாராரு பாடல்… குடி, கும்மாளமாக தி.மு.க. கவுன்சிலர்!

காரில் பயணம்… கையில் மது பாட்டில்… ஸ்டாலின்தான் வாராரு பாடல்… குடி, கும்மாளமாக தி.மு.க. கவுன்சிலர்!

Share it if you like it

கார் பயணத்தின்போது ஸ்டாலின்தான் வாராரு என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி, கையில் மதுக்கோப்பை மற்றும் மது பாட்டிலுடன் தி.மு.க. கவுன்சிலர் கும்மாளம் போட்ட வீடியோ வெளியாகி, எதிர்க்கட்சியினரின் நகைப்புக்கு ஆளாகி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அண்ணாகிராம ஒன்றியம் மேல்கவரப்பட்டு தட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு. தி.மு.க.வைச் சேர்ந்த இவர், ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர், தி.மு.க. கட்சிக் கொடி கட்டிய காரில் தனது நண்பர்களுடன் பயணம் செய்கிறார். காரில் ‘ஸ்டாலின்தான் வாராரு… விடியல் தரப்போறாரு…’ என்கிற பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்போது, காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் குமரகுரு, டேஷ் போர்டில் இருக்கும் ஸ்டாலின் படத்திற்கு முன்பாக, இரு கைகளிலும் இரு மதுக்கோப்பைகளையும், அதற்குள் இரு மதுப்பாட்டில்களையும் வைத்துக்கொண்டு மேற்படி பாடலுக்குத் தகுந்தார்போல் ஆட்டம் போடுகிறார்.

பின்னர், ஒரு இடத்தில் காரை நிறுத்தி கீழே இறங்கியவர்கள், மதுப்புட்டிகளை காலி செய்கின்றனர். அப்போதும், ஸ்டாலின்தான் வாராரு… விடியல் தரப்போறாரு… பாடலை ஒலிக்க விட்டு, குத்தாட்டம் போடுகிறார்கள். இதன் பிறகு, மீண்டும் காரில் ஏறி புறப்படுகிறார்கள். இந்தக் காட்சிகள் அனைத்தையும் காரில் இருந்த அவரது நண்பர் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதுதான் திராவிட மாடல் போல என்று கலாய்த்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மது போதையில் குமரகுருவும், தி.மு.க. கிளைச் செயலாளர் தாமோதரனும் நேராக அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார்கள் குமரகுரு. அப்போது, அங்கிருந்த கள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் ராஜசேகர், கீழ்கவரப்பட்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நளினியின் கணவர் பிரகாஷ் ஆகியோரிடம் இருவரும் தகராறு செய்திருக்கிறார்கள். மேலும், அங்கிருந்த கட்டையை எடுத்து பிரகாஷை அங்கிருந்து ஓட ஓட விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அலுவலகத்திலிருந்த பி.டி.ஓ., மேலாளர் மற்றும் ஊழியர்கள் யாரும் கண்டுகொள்ளவே இல்லையாம். போலீஸிலும் புகார் செய்யவில்லையாம்.

அதேசமயம், தாக்குதலுக்குள்ளான கவுன்சிலர் ராஜசேகர், பிரகாஷ் ஆகியோர் இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால், போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆகவே, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருக்கும் சி.சி.டி.வி. கேமராவின் பதிவுகளை வைத்து கோர்ட்டில் வழக்குத் தொடர முடிவு செய்திருக்கிறார்களாம். ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த கவுன்சிலர்களுக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் அப்பகுதி மக்கள்.


Share it if you like it