கடலூரில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சாந்தி. இவரது கணவர் மதியழகன். மீனவரான இவருக்கும், மதிவாணன் என்பவருக்கும் ஊராட்சி மன்றத் தேர்லில் போட்டியிடுவது தொடர்பாக 2019-ம் ஆண்டிலிருந்தே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 2020-ம் ஆண்டு மதிவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்தவர் மதியழகன். இதனால் மதிவாணனின் ஆதரவாளர்கள் மதியழகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், மதியழகன் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பன் சண்முகம் பிள்ளை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மதியழகனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டது. மதிவாணனின் ஆதரவாளர்கள்தான் இக்கொலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பதட்டத்தை தணிக்க போலீஸார் குவிக்கபப்ட்டிருக்கிறார்கள்.