தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி!

தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி!

Share it if you like it

கடலூர் அருகே இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கடலூரில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் பண்ருட்டி நோக்கிச் சென்றது. அதேபோல, பண்ருட்டியிலிருந்து பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பஸ் கடலூருக்கு வந்தது. கடலூர் நோக்கிச் சென்ற பஸ், காலை 10 மணியளவில் மேல்பட்டாம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் தாறுமாறாக ஓடியது. இதைக் கண்ட கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்த பஸ் டிரைவர் அதிர்ச்சியடைந்து, சாலை ஓரமாக பஸ்ஸை ஓட்டிச் சென்றார். எனினும், தாறுமாறாக வந்த பஸ், எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேராக மோதியது.

இதனால் அதிர்ச்சியில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினரும், அவ்வழியே சென்றவர்களும், பஸ்ஸின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து, போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும், ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இக்குழுவினர், படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும், இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். பலியானர்களில் ஒருவர் பண்ருட்டியைச் சேர்ந்த சீனுவாசன் என்பதும், மற்றொருவர் பஸ் டிரைவர் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த அந்தாளமணி என்பதும் தெரியவந்திருக்கிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it