நடந்து முடிந்த லோக் சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை முடிந்து நாளையே தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலில் அமோகமாக வெல்லும், எதிர்க் கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி தோற்கும், என்று இரண்டு நாட்கள் முன்பே பரவலாகத் தெரிந்தது. காரணம், வெளிவாசல் கருத்துக் கணிப்புகள் (exit polls) இந்த முடிவுகளைக் கணித்து அறிவித்தன.
அரசியல் நோக்கர்கள் பலரும் எதிர்பார்த்த தேர்தல் முடிவா இந்தக் கணிப்புகள்? ஆம்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் – ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, மு. க. ஸ்டாலின், அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் – எதிர்பார்த்த தேர்தல் முடிவும் இதுதானா? ஆம், இதுதான்.
மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்போது ஜெயிக்கும், மத்தியில் மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும், என்று கணிக்கத் தெரியாத மண்டூகள் அல்ல எதிர்க்கட்சித் தலைவர்கள். அவர்களின் தேர்தல் தோல்வி அவர்களே ஊகித்ததுதான். ஆனால் பிரதமர் மோடியின் பெருமையை, தங்கள் தோல்வியை, மக்களின் முடிவை, ஏற்றுக் கொள்ளும் நேர்மையும் ஜனநாயகப் பக்குவமும் அவர்களிடம் இல்லை.
இந்த லோக் சபா தேர்தலில் ஆறேழு கருத்துக் கணிப்பு அமைப்புகள் வெளிவாசல் கருத்துக் கணிப்பு நடத்தி, அவை எல்லாமே தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் அந்தக் கூட்டணி சராசரியாக சுமார் 360 தொகுதிகளில் வெல்லும், எதிர்க் கட்சிகளின் இண்டி கூட்டணி சுமார் 149 இடங்களை மட்டும் கைப்பற்றும் என்று அறிவித்தன. சற்று கூடக் குறைய தேர்தல் முடிவுகள் அமையலாம். ஆனால் இண்டி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைப்பதாக இறுதி முடிவுகள் அமையாது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு, இந்த கருத்துக் கணிப்பை நிராகரித்த ராகுல் காந்தி, “இது மோடி ஊடகங்களின் கருத்துக் கணிப்பு. இண்டி கூட்டணி 295 இடங்களில் வெல்லும்” என்று சவாலாகப் பேசினார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் கார்கேயும் “மக்கள் வெளிப்படுத்திய வெளிவாசல் கருத்துக் கணிப்பின் படி, இண்டி கூட்டணி 295 இடங்களிலாவது வெல்லும்” என்று சொன்னார். காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சல்மான் குர்ஷித்தும் அதையே சொன்னார்கள். சமஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் அப்படியே 295-ஐ பிடித்துக் கொண்டு பேசினார்.
இண்டி கூட்டணி 295 எம். பி. இடங்களை வென்று ஆட்சி அமைக்கும் என்று ஏன் இந்த எதிர்க் கட்சித் தலைவர்கள் அப்பட்டமாகப் பொய் பேசினார்கள்? தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளிவந்தவுடன், தயங்காமல் இன்னொரு பெரிய பொய்யைச் சொல்லத் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்களா? அந்தப் பெரிய பொய் என்ன என்பதை அவர்களில் ஒருவரான அரவிந்த் கேஜ்ரிவால் இப்போதே சொல்லிவிட்டார்.
கேஜரிவால் சொன்னது: “வெளிவாசல் கருத்துக் கணிப்புகள் எல்லாம் போலி. ஓட்டு எண்ணுவதற்கு மூன்று நாட்கள் முன்பு ஏன் அவர்கள் இதைச் செய்ய வேண்டும்? இதற்கான ஒரு விளக்கம்: அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு செய்யப் பார்க்கிறார்கள்.”
கேஜ்ரிவால் சொல்ல வருவது இதுதான்: ‘தேர்தலில் மக்கள் நிஜமாக வாக்களித்தபடி, இண்டி கூட்டணிதான் வென்று ஆட்சி அமைக்க வேண்டும். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைப்பதாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டால், அது அவர்களின் போலியான வெற்றி. அப்படி நடந்தால், தேர்தல் ஆணையமும் பாஜக-வும் கூட்டு சதி செய்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்படச் செய்து, இண்டி கூட்டணி தோற்றதாகக் காண்பித்து ஜனநாயகத்தையும் மோசடி செய்துவிட்டார்கள் என்று அர்த்தம்.’ கூசாமல், முகத்தில் சலனம் இல்லாமல், பொய் பேசுவது கேஜ்ரிவாலுக்குக் கைவந்த கலை.
“எதுவாக இருந்தாலும், வாக்குப் பதிவில் மக்களின் முடிவு தெரிந்தபின் எல்லாக் கட்சிகளும் அதை ஏற்பது ஜனநாயகத்தில் அவசியம். அதன்படி புதிய அரசு அமைந்து நாடு முன்னேறட்டும்” என்று எதிர்க் கட்சிகள் பேசி இருந்தால் நல்லது. அத்தகைய உயர்ந்த ஜனநாயகப் பண்பு நமது எதிர்க் கட்சிகளிடம் இல்லை.
அது இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம், “வெளிவாசல் கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், தேர்தல் முடிவுகள் என்ன என்று நாம் மூன்று நாட்களில் பார்க்கப் போகிறோம். பிறகு எங்கள் கருத்தைச் சொல்கிறோம்” என்று மதிப்பாகவாவது எதிர்க் கட்சித் தலைவர்கள் பேசி இருக்கலாம். ஆனால் எதிர்க் கட்சிகளின் அரசியல் உலகில் மதிப்பு மரியாதை என்பது கிடையாது. எல்லாம் சின்னத்தனம்.
வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு ஒரு நாள் முன்பாக, சோனியா காந்தி மட்டும் வேறு வழி இல்லாமல் “நாம் பொறுத்திருப்போம். வெளிவாசல் கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பின்னால் எப்படியும் பேச வசதியாக, இப்படியும் அப்படியுமாகச் சொல்லி இருக்கிறார்.
எல்லா எதிர்க் கட்சிகளும் சேர்ந்து, ஒரு எண்ணத்தில் ஒன்றுபடுகிறார்கள். அதாவது, ‘மக்களின் தேர்வு மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும், நாம் ஏன் அதை ஏற்கவேண்டும்? தேர்தல் ஆணையத்தின் நன்மதிப்பை, அதன் நடு நிலைமையை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மையை, நாம் இழித்தாலும் பழித்தாலும் பரவாயில்லை. அந்த ஆணையத்தின் சிறப்பான பணிகளால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் உபயோகிப்பதால், ஜனநாயக உலகில் இந்தியாவுக்குக் கிடைக்கும் நற்பெயர் ரிப்பேர் ஆனாலும் பரவாயில்லை. நமக்கு வேண்டியது, மோடி பிரதமர் ஆகக் கூடாது, பாஜக பெரிய சக்தியாக இருக்கக் கூடாது.’
‘பாஜக-வின் முக்கியத் தலைவராக மோடி இருந்தால், அதுவும் அவர் பிரதமராக இருந்தால், நாம் விரும்பியபடி பெர்பாமன்ஸ் செய்ய முடியவில்லை. எது எக்கேடு கேட்டால் என்ன? மேலும் மேலும் நாம் கஷ்ட-நஷ்டப் பட முடியாது. இதில் கோர்ட் கேஸ்கள் வேறு புதுசு புதுசாக வருகின்றன. எல்லாவற்றையும் தாங்க முடியாது. எந்தத் தீர்ப்பு யாருக்கு எதிராக எப்போது வருமோ? அதனால் எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, மோடியின் வெற்றிக்கு வகை செய்யும் எதையும் தாம் தூம் என்று கண்டபடி எதிர்ப்போம், அவரை வீழ்த்த கன்னாபின்னா பேச்சு எதையும் பேசுவோம். மான அவமான சிந்தனைகள் நமக்கு உதவாது.’
இந்த எண்ணம்தான் எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரையும் பிதற்றலாக, பைத்தியக்காரத்தனமாக, வில்லத்தனமாக, நமது தேச நலன்களையும் ஜனநாயக நெறிகளையும் காலில் நசுக்கும் விதமாகப் பேச வைக்கிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டுக்குச் செய்த பணிகளும் நன்மைகளும் அசாத்தியமானவை, உலக அளவில் நமக்குப் பெருமை சேர்ப்பவை. அவற்றை நாம் கண்ணால் காணலாம், எண்களில் அளக்கலாம்.
எளிதில் அளக்க முடியாத ஒரு பெருமையும் மகிமையும் மோடி என்ற மனிதனின் மறு பக்கத்திற்கு உண்டு. அவர் ஒரு மாமனிதன் என்பதற்கு அதுவும் சம அளவில் முக்கியமானது. அது என்னவென்றால்: நாட்டின் சுயநல தேச விரோத எதிர்க் கட்சிகளைத் தேர்தலில் வென்று, அவைகளைப் பத்தாண்டுகளாக மத்திய ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளி வைத்திருப்பது. வரும் ஐந்தாண்டுகளுக்கும் இந்தப் பேறு நமக்குக் கிடைக்கும். மோடி இந்தியாவுக்குச் செய்திருக்கும் மிகப் பெரிய சேவை இது. மோடியின் சேவை இன்னும் பற்பல ஆண்டுகள் நாட்டுக்குத் தேவைதானே?