அண்ணனை இழந்த தம்பிகள் தி.மு.க. அரசிடம் நீதி கேட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க ஆட்சியில் அப்பாவி பொதுமக்கள் பலர் தமிழக காவல்துறையினரால் பாதிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு இதுவரை 6 லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாக பிரபல அரசியல் விமர்சகர் அண்மையில் பகீர் தவலை வெளியிட்டு இருந்தார். நாட்டு மக்களிடம் உண்மையை எடுத்துகூற வேண்டிய ஊடகங்கள், பத்திரிக்கைகள், ஆளும் கட்சியின் தவறுகளை கண்டும் காணாமல் கடந்து செல்வது தொடர்கதையாக உள்ளது.
அந்த வகையில், ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியை சேர்ந்த மாணவர் மணிகண்டன் (வயது 21 ) காவல்துறையினர் விசாரணையில் மரணம் அடைந்தார். இதையடுத்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன். மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் காவல்துறையினர் விசாரணையில் மரணமடைந்து இருந்தனர்.
இந்த நிலையில் தான், கடந்த 18.4.2022-ம் தேதி இரவு 11.30 மணியளவில், சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் (28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25) வந்துள்ளனர். அவர்களின் ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, இருவரும் முன்னுக்குப் பின் முரணான வகையில் பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். மறுநாள் காலை 19.4.2022 அன்று விக்னேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். விக்னேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், காவல்துறையினர் அடித்தே கொன்று விட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், தமிழகம் முழுவதும் இந்த செய்தி தான் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த வகையில், தமிழ் மின்ட் இணையதள ஊடகத்திற்கு விக்னேஷ் தம்பிகள் உருக்கமுடன் பேசிய காணொளி கல்நெஞ்சையும் கரைய வைப்பது போல் உள்ளது. அதில் ஒரு தம்பி கூறியதாவது; என் அண்ணன் முகத்தை பார்த்த பொழுது, அவரின் வாய் கிழிந்த நிலையில் இருந்தது. இது எல்லாம் ரொம்ப தப்பு. ஒரு ஏழை இப்படி பண்றீங்க அதுவே ஒரு பணக்காரன் காரில் வந்திருந்தால் இப்படி செய்து இருப்பீர்களா என கண்ணீருடன் கேள்வி எழுப்பிய காணொளி தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதன் லிங்க் இதோ.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்தனர். அப்பொழுது, எடப்பாடி அரசை தி.மு.க எம்.பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தற்பொழுதைய முதல்வருமான ஸ்டாலின், அடிமை ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் ஊடக நெறியாளர்கள் எப்படியெல்லாம் மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்த்தனர். இப்பொழுது மட்டும் ஏன்? விக்னேஷ் மரணத்தை மூடி மறைக்க முயல்கின்றனர் என்பதே பல சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கேள்வியாக உள்ளது.
தி.மு.க ஆட்சியில் ஹிந்துக்கள் மட்டுமில்லை சிறுபான்மையினருக்கு கூட நீதி கிடைக்காதே என்பதே விக்னேஷ் மரணம் உணர்த்தும் செய்தியாகும். இதுமட்டுமில்லாமல், அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே நிதர்சனம்.

