இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலக எண்ணுக்கு கடந்த 22-ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய மர்ம நபர், ‘24 மணி நேரத்துக்குள் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்து விடுவேன்’ என்று இந்தியில் மிரட்டி இணைப்பை துண்டித்தார்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.