தி.மு.க. ஆட்சியில் எந்த விஷயத்தில் தமிழகம் முதலிடம் பிடிக்கிறதோ இல்லை, கடன் வாங்கும் விஷயத்தில் எப்போதும் முதலிடம்தான்! அந்த வகையில், கடன் வாங்குவதில் நிகழ் நிதியாண்டிலும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு முதலிடம் பிடித்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இலவசங்களை அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான். அண்ணாதுரை காலத்திலேயே 1 ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம். ஆனால், 1 படி அரிசி நிச்சயம் என்று வாக்குறுதி கொடுத்துத்தான் தி.மு.க. வெற்றிபெற்றது. அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, முதல்வராக பதவியேற்ற கருணாநிதி, அரிசி வழங்கத் தேவையான மானியத்தை வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று பிளேட்டை திருப்பிப் போட்டார். பின்னர், கருணாநிதியுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக, 1972-ம் தனிக் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர்., தொடர்ந்து 3 தேர்தல்களில் வெற்றிபெற்று தி.மு.க.வை புலம்ப வைத்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கருணாநிதி, ஏகப்பட்ட இலவசங்களை அறிவித்து ஆட்சியை பிடித்தார். இந்த இலவசங்களுக்கெல்லாம் பணத்துக்கு எங்கே போவது? எனவே, மத்திய ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கத் துவங்கினார். விளைவு, படிப்படியாக கடன் உயர்ந்து, 2006 தி.மு.க. ஆட்சி தொடக்கத்தில் 57,457 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன், 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி முடிவில் 1,14,000 கோடியாக உயர்ந்து விட்டது. பின்னர் வந்த அ.தி.மு.க. அரசும் இலவசங்களை தொடரவே, கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், நிகழாண்டும் அதிக கடன் வாங்கிய மாநிலத்தில் தமிழகத்தின் தி.மு.க. அரசு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
இதுகுறித்து ஐ.சி.ஆர்.ஏ. லிமிடெட் என்கிற மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறியிருப்பதாவது:- கடந்த பட்ஜெட்டில் 2022-ம் நிதியாண்டில் மூலதன செலவு 42,200 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், 2022-ம் நிதியாண்டில் 4-வது காலாண்டில் (ஜனவரி – மார்ச்) 25,800 கோடி ரூபாய் கடன் வாங்கவிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. அதன்படி, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் தமிழக அரசு 13,400 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது. மேலும், மார்ச் மாதத்தில் சுட்டிக்காட்டப்பட்ட 8,800 கோடி ரூபாய் கடன் வாங்கினால், நாலாவது காலாண்டில் 22,200 கோடி ரூபாயாக இருக்கும். ஆக மொத்தத்தில் 2022-ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த கடன் 74,200 கோடி ரூபாயாக இருக்கும். இது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம் ஒவ்வொரு தனி மனிதனின் கடனும் உயர்ந்திருக்கிறது. அதாவது, தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.64 லட்சம் கடன் இருந்தது. இது தற்போதைய தி.மு.க. ஆட்சியில் 3 லட்சமாக உயர்ந்திருக்கிறது. எனவே, தி.மு.க. அரசை நெட்டிசன்கள் வறுதெடுத்து வருகின்றனர். மேலும், இதே நிலை நீடித்தால் தமிழக மக்கள் கடனிலிருந்து மீளவே முடியாது என்று சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.