பள்ளி கட்டடம் கட்டுவதில் தாமதம் : மாணவ மாணவிகள் சிரமம் : பெற்றோர்கள் போராட்டம் !

பள்ளி கட்டடம் கட்டுவதில் தாமதம் : மாணவ மாணவிகள் சிரமம் : பெற்றோர்கள் போராட்டம் !

Share it if you like it

பாளையங்கோட்டை, மனக்காவலம் பிள்ளை நகரில் 7வது வார்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியின் கட்டிடம் முற்றிலும் சிதிலமடைந்துள்ளதால் கட்டிடத்தைச் சீரமைத்துத் தர வேண்டும் எனக் கூறி இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள், கடந்த வருடம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, பள்ளியை சீரமைக்க உடனடியாக ஒரு கோடி ரூபாயை நிதி அனுமதித்து ஆட்சியர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், புதிய கட்டிடங்கள் கட்டும் பணியை ஆரம்பித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பழைய கட்டிடம் மட்டும் முழுவதுமாக இடிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை புதிய கட்டிடத்தின் பணிகள் முழு வீச்சில் தொடங்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது இங்கு படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிக்கு அருகில் உள்ள சிறிய கட்டிடத்தில் இடப் பற்றாக்குறையோடு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், புதிய கட்டுமானம் கட்டுவதற்குக் கடந்த ஓராண்டாகத் தோண்டிய குழியில் நேற்று முன்தினம் குழந்தை ஒன்றும் தவறி விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, பலமுறை முறையிட்டும் கட்டிட பணியைத் தொடங்குவதில் மாவட்ட கல்வித்துறை, பொதுப்பணித்துறை, மற்றும் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *