தி.மு.க. ஒரு ஊழல் கட்சி என்று விமர்சனம் செய்த டெல்லி முதல்வர் இன்று அதே கட்சியை வெகுவாக பாராட்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
லஞ்சம், ஊழல் செய்யும் கட்சிகளுக்கு மாற்றாக எனது கட்சி இருக்கும் என்று கூறி ஆம் ஆத்மியை துவக்கியவர் அரவிந்த் கெஜ்ரிவால். இதையடுத்து, கடந்த 2015 – ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, அவர் முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
இதனிடையே, கடந்த 2018 – ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்ய கட்சியை துவக்கினார். இந்நிகழ்ச்சியில், அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொளி வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, பேசிய டெல்லி முதல்வர், தி.மு.க, அ.தி.மு.க. இரண்டும் ஊழல் கட்சிகள். நீங்கள் வாக்கு சாவடிக்கு செல்லும் போது இந்த இரண்டு ஊழல் கட்சிகளுக்கும் ஓட்டு போடாதீர்கள். நேர்மையான கட்சிகளுக்கு மட்டுமே நீங்கள் வாக்கு செலுத்த வேண்டும் என பேசியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்றைய தினம் துவக்கி வைத்தார். இந்த, திட்டத்திற்கு புதுமைப் பெண் திட்டம் என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வரையும், தி.மு.க. அரசின் திட்டங்களையும் வெகுவாக பாராட்டி இருந்தார். தி.மு.க. ஒரு ஊழல் கட்சி என்று மதுரையில் பேசி விட்டு இன்று அதே கட்சியை பாராட்டுவது சரியா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.