டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தடாலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இரண்டு நாட்கள் கழித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். மக்கள் தீர்ப்பை அறிவிக்கும் வரை அந்த நாற்காலியில் அமரமாட்டேன். டெல்லியில் தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ளன.
சட்ட நீதிமன்றத்தில் நீதி கிடைத்தது, இனி மக்கள் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும். மக்களின் உத்தரவுக்கு பிறகே நான் முதல்வர் நாற்காலியில் அமர்வேன்.” என்று கூறினார்.
டெல்லி முதலமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்த பிறகு, ஆம் ஆத்மி கட்சியியிலிருந்து வேறு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு தற்காலிகமாக முதல்வர் பொறுப்பை ஏற்பார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முடிவு குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது :-,
“அரசியலில் நுழைய வேண்டாம் என்று கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே அறிவுரை கூறியிருந்தேன். சமூக சேவையில்தான் உண்மையான நிறைவு உள்ளது என்று பலமுறை விளக்கியும் அவர் கேட்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்கு வந்திருக்கக் கூடாது என்று நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன்.
ஹசாரே மேலும் கூறுகையில், “இப்போது நடந்தது தவிர்க்க முடியாதது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை என்னால் அறிய முடியவில்லை.”இவ்வாறு தெரிவித்தார்.