நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்துக்கு தாரைவார்க்கப்பட்ட அரசு சொத்துக்களை மத்திய பா.ஜ.க. அரசு மீட்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் பெரும்பாலான ஹிந்து மக்கள் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நிலம் பத்திரப்பதிவு செய்ய, சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது, மேற்கண்ட கிராமமே வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது. ஆகவே, வக்ஃபு வாரியத்திடம் சென்று தடையில்லா சான்றிதழ் பெற்றுவரும்படி சொல்லி, பத்திரப்பதிவு செய்ய மறுத்து விட்டனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. எப்படி ஒரு கிராமமே வக்ஃபு வாரியத்திடம் சென்றது என்கிற விசாரணையில் வடமாநில மீடியாக்களும், ஹிந்து அமைப்பினரும் விசாரணையில் இறங்கினர். இதில்தான், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அரசு சொத்துக்கள்பலவற்றை, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், வக்ஃபு வாரியத்திற்கு எழுதி வைத்திருப்பது தெரியவந்து, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில், டெல்லியில் மட்டும் 123 அரசு சொத்துக்கள் வக்ஃபு வாரியத்துக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. அதாவது, 2014 தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திட்டமிட்டது காங்கிரஸ். இதற்காக, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக, டில்லியின் முக்கிய பகுதிகளில் உள்ள 123 அரசு சொத்துக்களை, வக்ஃபு வாரியத்திற்கு தாரைவார்த்திருக்கிறது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. அப்போது மத்திய அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித்தான், இந்த நடைமுறைகள் அனைத்தையும் சுமூகமாகவும், கமுக்கமாகவும் முடித்து வைத்திருக்கிறார். ஆனால், ஓட்டுக்களை குறிவைத்து காங்கிரஸ் அரசு நடத்திய இந்த தாரைவார்ப்பு, அக்கட்சிக்கு பலனளிக்காமல் போய்விட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதன் பிறகு, வக்ஃபு வாரியத்திற்கு வழங்கப்பட்ட சொத்துக்கள் விவகாரத்தை, பா.ஜ.க. அரசு கையில் எடுத்து.
மேலும், காங்கிரஸ் அரசின் உத்தரவை எதிர்த்து, விஷ்வ ஹிந்து பரிஷித் (வி.எச்.பி.) அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. அப்போது, மதிப்புமிக்க சொத்துக்களை தாரைவார்க்க முடியாது என்று வி.எச்.பி. வாதிட்டது. இதனிடையே, 123 சொத்துக்களில், 61 சொத்துக்கள், நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துக்கு (எல்.என்.டி.ஓ.) சொந்தமானது என்பதும், மீதமுள்ள 62 சொத்துக்கள் டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு (டி.டி.ஏ.) சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இது தொடர்பாக விசாரிக்க 2016-ம் ஆண்டு ஒரு நபர் கமிட்டி ஒன்றை அமைத்தது பா.ஜ.க. அரசு. இதற்கான அறிக்கை 2017-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, 2018-ல் இரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், வக்ஃபு வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்த வேண்டும் என்று இரு நபர் கமிட்டி பரிந்துரைத்தது. ஆனால், தற்போது வரை சொத்துக்கள் மீட்கப்படவில்லை. ஆகவே, உரிய விசாரணை நடத்தி வக்ஃபு வாரியத்திடம் இருந்து சொத்துக்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.