டெல்லியில் நடந்தது கலவரமல்ல… பயங்கரவாதம்: வி.ஹெச்.பி.!

டெல்லியில் நடந்தது கலவரமல்ல… பயங்கரவாதம்: வி.ஹெச்.பி.!

Share it if you like it

டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்தது கலவரமல்ல, பயங்கரவாதம் என்று வி.ஹெச்.பி. இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் தெரிவித்திருக்கிறார்.

பாரதம் முழுவதும் ஏப்ரல் 16-ம் தேதி ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஊர்வலங்களும் நடந்தன. அந்த வகையில், டெல்லியிலும் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. ஜஹாங்கிர்புரியில் நடந்த ஊர்வலத்தின்போது அப்பகுதியிலிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள், ஹிந்துக்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, துப்பாக்கியாலும் சுட்டனர். இதில், ஏராளமான ஹிந்துக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்தது கலவரம் அல்ல, பயங்கரவாதம் என்று கூறியிருக்கிறார் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டெல்லி ஜஹாங்கிர்புரி ஹனுமன் ஜெயந்தி விழா ஊர்வலத்தின்போது நடந்தது கலவரம் அல்ல. அது ஹிந்து சமுதாயத்தின் மீது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல். இத்தாக்குதலுக்கு ஹிந்து சமுதாயத்தினர் பதிலடி கொடுக்கத் தொடங்கி விட்டால் என்னாகும் என்பதை பயங்கரவாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆகவே, ஹிந்து சமுதாயத்தினரின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.

தவிர, ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்படவில்லை என்று கூறினால், இவ்வளவு குறுகியகால அறிவிப்பில் எங்கிருந்த வந்தது அவ்வளவு கற்கள்? ஏற்கெனவே ராமநவமி அன்று நடத்தப்பட்ட தாக்குதலும், தற்போது ஹனுமன் ஜெயந்தி அன்று நடத்தப்பட்ட தாக்குதலும் ஒரே மாதிரியானவைதான். தாக்குதல் நடத்தியவர்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள், ஸ்லீப்பர் செல்கள் என இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அல்கொய்தா தலைவர் அல் ஜவஹாரியின் வீடியோ இது திட்டமிட்ட சதி என்பதை தெளிவுபடுத்துகிறது.

மேலும், இத்தாக்குதலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. இத்தாக்குதலுக்காக உலகளாவிய பாரத எதிர்ப்பு டூல்கிட் கும்பலிடம் இருந்து நிதியுதவியும், ஆதரவும் பெறப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக இக்கும்பலுக்கு காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவாக இருக்கின்றன. ஜிகாதிகளின் இதுபோன்ற செயல்பாடுகளை மறைப்பதற்காக தொலைக்காட்சி விவாதக் குழுக்கள் முதல் நீதிமன்றங்கள் வரை எல்லா இடங்களிலும் டூல்கிட் கும்பல் அணி திரட்டி இருக்கிறது. மேலும், வெளிநாடு வாழ் பணக்கார ஜிகாதிகளால் சமூக ஊடகங்களில் முஸ்லீம்களை தூண்டிவிடும் முயற்சிகளும் நடந்து வருகின்றன” என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.


Share it if you like it