டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தின் மாடியில் இருந்து பெண் குதிக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தலைநகர் டெல்லியின் முக்கிய பகுதிகள் அனைத்தும் மெட்ரோ ரயிலால் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், கிழக்கு டெல்லி அக்ஷர்தம் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலை இங்குள்ள புளூ லைன் பிரிவு கட்டடத்தின் மேல் பகுதிக்கு ஒரு இளம்பெண் வந்தார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த இளம்பெண்ணை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால், அப்பெண் கேட்காமல் மேல் பகுதிக்குச் சென்று விட்டார்.
அந்தப் பெண் ஏன், எதற்காக செல்கிறார் என்பது தெரியாமல் பாதுகாப்புப் படை வீரர்கள் குழப்பமடைந்தனர். எனவே, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அந்தப் பெண் கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார். பாதுகாப்புப் படை வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பெண் கேட்கவில்லை. ஆகவே, அப்பெண் கீழே குதித்தால் என்ன செய்வது என்று யோசித்தனர் பாதுகாப்புப் படை வீரர்கள். எனவே, அப்பெண்ணை காப்பாற்றுவதற்காக கீழே இருந்த பொதுமக்கள் உதவியுடன் போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை சேகரித்து பாதுகாப்பு வலை அமைத்தனர்.
இதனிடையே, அப்பெண் சற்றும் தாமதிக்காமல் மெட்ரோ ரயில் நிலைய கட்டடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். கீழே இருந்தவர்கள் அப்பெண்ணை பாதுகாப்பு வலையில் பிடித்தனர். எனினும், அப்பெண் படுகாயமடைந்தார். எனவே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அப்பெண் நேற்று மாலை உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அப்பெண் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், ஹரியானா மாநிலம் குருகிராமில் பணிபுரிந்தவர் என்பதும் தெரிவந்திருக்கிறது. சமீபத்தில் பணியிலிருந்து விலகிய அப்பெண், டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார். இவர் யார், எதற்காக தற்கொலை முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.