டெல்லியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையைத் திறந்து வைத்த பாரத பிரதமர் மோடி, பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாரதியார் பாடியதற்கேற்ப உலகின் மிகச் சிறந்த நாடாக இந்தியா கட்டமைக்கப்பட வேண்டும் என்று தமிழில் பேசி அசத்தினார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம், பிரதமர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவா் இல்லங்கள், மத்திய அமைச்சகங்களின் செயலகம் ஆகியவற்றோடு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தையும் 13,450 கோடி ரூபாய் செலவில் மத்திய நகா்புற வளா்ச்சித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில், ராஜ பாதையில் பொதுமக்களின் வசதிக்காக சென்ட்ரல் விஸ்டா மறு உருவாக்கம் செய்யப்பட்டது. கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்ட்ரல் விஸ்டா வளாகத்தின் திறப்பு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை திறந்து வைத்ததோடு, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் 28 அடி உயரமும் 280 டன் எடையும் கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “காலனித்துவத்தின் சின்னம் ராஜபாதை அழிக்கப்பட்டு, கடமை பாதை வடிவத்தில் புதிய சகாப்தம் தொடங்கி இருக்கிறது. இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை நிறுவப்பட்டிருப்பது நமக்கெல்லாம் பெருமை. அகண்ட பாரதத்தின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான். 1947-க்கு முன்பே அந்தமானுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்து மூவர்ணக்கொடியை ஏற்றினார். சுதந்திரத்துக்குப் பிறகு நேதாஜியின் பாதையை பின்பற்றியிருந்தால் பாரதத்தின் மேன்மை பன்மடங்கு அதிகரித்து பெரும் உயரங்களைத் தொட்டிருக்கும். துரதிருஷ்டவசமாக அவர் மறக்கப்பட்டார். அதேபோல, பாரதத்தை பற்றி மகாகவி பாரதியார் சிறந்த கவிதையை எழுதி இருக்கிறார். அந்த வரிகள் ஒவ்வொரு இந்தியரையும் கர்வம் கொள்ள வைக்கும். பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாடினார். இதன் பொருள் உலகிலேயே சிறந்த நாடு இந்தியா என்பதாகும். ஆகவே, பாரதியார் பாடியதற்கேற்ப உலகின் மிகச் சிறந்த நாடாக இந்தியா கட்டமைக்கப்பட வேண்டும்” என்றார்.